பக்கம்:பாற்கடல்.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

335


முடியாத தன்மையுடன் நெருங்கிக்கொண்டு வருகிறது; நெருங்கிக்கொண்டே வருகிறது.

ஒரே சீராக விழும், இல்லை, இறங்கும் இடிகள் பலமாக இருக்கு. அந்த இடத்தை விட்டு ஓடிப்போக வேணும்னு தோண்றது. அதேசமயத்தில் ஏதோ ஒரு வசியம் என்மேல் கூடு கட்டுகிறது. என்னால் அங்கு விட்டு ஓட முடியாது.

பெல்ஸ் ரோடும் பைக்ராப்ட்ஸ் ரோடும் சந்திக்கும் கூடலில் ஜனம் கடல் கடைகிறது. அந்தக் கடைசலில் கக்கும் நுரை போலும் மிச்சக் கூட்டம் வழிகிறது, சுழல்கிறது, நுரைக்கிறது.

“சொடேர் ! சொடேர் ! சொடேர்!”

பல நூற்றுக்கணக்கான சாட்டைகள் சொடுக்குவது போலும் - ஆனால் இதில் ஆச்சரியம் யாதெனில் ஒரே அளவில் லயம் பிசகாத அந்தத் தாளம். தாள பயங்கரம்.

திடும்! திடும்! திடும்!

எந்தச் சந்தேகமும் வேண்டாம். சப்தம் நெருங்கி விட்டது. இதோ, நேர்முகம் திரும்பினதுபோல், மெதுவாக - கம்பீரமாக, கூடவே ஒரு பயத்தையும் உண்டுபண்ணிக்கொண்டு, முதல் batch எங்கள் பார்வைக்குத் தோன்றுகிறது.

முஸ்லிம் குருக்கள் குரானிலிருந்து ஒரு சுலோகத்தைப் பாட்டுக் குரல் கொடுத்து வாசிக்கிறார். அந்தச் சுலோகம் முடிந்ததும்:

“ஆலி! ஜூலா! ஹஸ்ஸேன்! ஹுஸ்ஸேன்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/341&oldid=1534527" இலிருந்து மீள்விக்கப்பட்டது