பக்கம்:பாற்கடல்.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

338

லா. ச. ராமாமிருதம்


அவர்களைப் பற்றிக்கொண்டிருக்கும் ஆவேசத்தில் தனித்துத் தூக்கி நிற்கின்றனர்.

இவர்களின் மாரடி, துக்கம் முதலாக நேர்ந்தபோது அடித்துக்கொண்ட அந்தப் பரம்பரையிலிருந்து இறங்கிய அடி. இதில், சங்கிலியாலும், சாட்டையாலும் அடித்துக் கொள்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் நடுவே, அவர்களுக்குச் சரியாகத் தங்களை தண்டித்துக் கொள்ளும் என் வயதுச் சிறார்கள் சிலரைப் பார்க்கிறேன். வீராவேசம் கட்டிய மொக்குகள், இதற்குள்ளேயே இவவளவு வெறியா? விவரம் தெரிந்த பக்தியா? அல்லது பெரியவர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று ஒரு சந்துஷ்டியா?

”ஆலி! ஜூலா!, ஹஸ்ஸேன்! ஹுஸ்ஸேன்!”

இதுவரை உணராத ஒரு துக்கம் என் தொண்டையை அடைக்கிறது. நானும் - நானும் அந்தக் குழந்தைகளுடன் சேர்ந்து, அவர்களோடு நின்று, அவர்கள் துக்கத்தில் கலந்துகொள்ளமாட்டேனா என்று ஏதோ ஏக்கம் காண்கிறது. கால் கட்டை விரலிலிருந்து மண்டை உச்சி வரை ஒரு 'கிர்ர்ர்...!' அப்புறம் ஒண்ணும் தெரியல்லே.

அடுத்தாற்போல் ஏதோ குரல், மன்னியென்று நினைக்கிறேன் –

”குழந்தைகளை எல்லாம் இதுக்கெல்லாம் அழைச்சுண்டு வரப்படாது!”

அண்ணா குரல்: ”அப்படிப் பொத்திப் பொத்தி வெச்சால் எப்போதான் அதுகள் எல்லாத்துக்கும் பழகறது? இதையும் பார்க்க வேண்டியதுதான்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/344&oldid=1534615" இலிருந்து மீள்விக்கப்பட்டது