பக்கம்:பாற்கடல்.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

340

லா. ச. ராமாமிருதம்


துடைச்சுப் போட்டு வளைய வர வயசுதானே! அடியை மட்டுமல்ல அண்ணாவும் மன்னியும் ஊருக்குப் போனதையே மறந்துபோனேன். ஏன் விளையாட்டின் முனைப்பில் அண்ணாவும் மன்னியும் வீட்டில் இல்லாததுகட நினைப்பில் நிற்கவில்லை.

சின்ன அத்தை வீட்டுக்கு வந்திருந்தாள். அவள் புக்ககம் பட்டணத்தில்தான். திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் வீடு. கணாங்! கணாங்! கணாங்! வாசலிலேயே ட்ராம்கள் சென்றன. அத்தை அடிக்கடி பிறந்தகம் வருவதில்லை. வந்தாலும் தங்குவதில்லை.

”ஏன் அத்தை வந்திருக்கே?”

“என்னடி அம்மாப் பெண்ணே, உன் பிள்ளை இப்படிக் கேட்கிறான்?”

”ஏன் கேட்டதில் என்ன தப்பு? வர வர, நான் வாயைத் திறந்தாலே தப்பாயிருக்கு!”

“என்னை என்ன பண்ணச் சொல்றே? கொஞ்ச நாளாவே அவன் நாக்கில் சனி ஓடிண்டிருக்கு. நானும் பார்த்துட்டேன். கண்டிச்சாலோ, தண்டிச்சாலோ இனனும் அதிகமாறது.”

அம்மாப்பெண், பிள்ளைக்குப் பரிந்து பேசவில்லை. அம்மாப்பெண் எத்தனை நிர்த்தாக்ஷண்யமானவள் என்று எல்லாருக்குமே தெரியும். ராமாமிருதம் ராமேசுவரப் பிரசாதம் என்று ஏற்கெனவே தெரிந்த விஷயம். ஆகையால் அவனுடைய அசட்டுத்தனங்கள் எல்லாம் தனி ரீதியைச் சேர்ந்தவை.

திடீரென ரேழியில் கார்த்திகேயனின் அழுகை பெருங்குரலாய்க் கேட்டது. கையில் ஒரு சிவப்புக் காகிதத் துண்டுடன் உள்ளே வந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/346&oldid=1534617" இலிருந்து மீள்விக்கப்பட்டது