பக்கம்:பாற்கடல்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

342

லா. ச. ராமாமிருதம்


கார்த்திகேயன் கட்டுக்கடங்காமல் அழ ஆரம்பிச்சாச்சு. வீட்டுக்கு எதிரில் வண்டி நின்று நாங்கள் இறங்கியதுமே, வீட்டின் உள்ளிருந்து எங்களை எதிர்கொண்டது பேரழுகை, உள்ளே போனால் ஒரு பெரிய கூட்டம் மன்னியைச் சூழ்ந்துகொண்டு, அவளைக் கட்டிக் கொண்டு, மூலைக்கொருவராகத் தன் பக்கம் இழுத்துக் கொண்டு, “அடி பாவி, நீ முன்னால் போய்ச் சேர்ந் திருக்கக்கூடாதா ?” திட்டறாளா ? அழறாளா ? மன்னியைக் கொன்றுவிடப் போகிறார்களா? அது மாதிரி. ப..ய..ம்..ம்..ம்.

அன்றிரவு.

“ராமண்ணாவுக்குப் பரமபத சோபன படம் மாதிரி இனிமேல் ஏணி ஏர்றதும் பாம்பில் இறங்கறதுமா, ஜன்மாவஸ்தை கிடையாது. நேரே பெருந்திருவின் பாத கமலங்களில்கூட அல்ல - அவளுடைய அபய ஹஸ்தத்திலேயே சேர்ந்துட்டான். அதுமாதிரி ஐக்யம் சாமான்யமா கிடைக்கக்கூடியதா?”

வாளாடி அத்தைப் பாட்டியை முதல் முதலாகப் பார்க்கிறேன். செம்மரப் பாச்சிபோல் சிறுகூடாக, காய்ந்துபோன வெற்றிலைபோல் கூடத்தில் நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறாள். ஒடிந்த நாற்காலியைக் கூடச் சிம்மாசனமாக்கிவிடும் ப்ரஸன்னம் சிலபேருக்குத் தான் உண்டு.

அவளைச் சுற்றிச் சிறியவர், பெரியவர் எல்லாரும் உட்கார்ந்திருக்கிறோம்.

இந்தச் சமயத்தில் ஒரு உரத்த சிந்தனைக்கு இடம் வேண்டுகிறேன். இந்தக் குடும்ப வரலாறில், இந்தக் கால கட்டங்களை வெளியிடுவதில் எனக்கு நிச்சயமாக இருக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/348&oldid=1534619" இலிருந்து மீள்விக்கப்பட்டது