பக்கம்:பாற்கடல்.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

351


ஏளனத்துக்கு இடம் ஏற்படின், அது பார்க்கும் பார்வை யைப் பொறுத்தது எனும் சகஜமான வாதத்தில் நான் அடைக்கலம் தேடுகிறேன்.

குற்றமாய்ப் பார்ப்பவர்களின் குற்றச்சாட்டில் ஓரளவு நியாயம் உண்டு. ஆனால் இந்நிலை இன்றியமையாதது.

நிகழ்ச்சி சரித்திரமாகி, சரித்திரம் நினைவாகி, நினைவு கதையாகி, கதையைச் சொல்லிச் சொல்லி, அல்ல, நினைவின் ஊறலில், சொல்லின் பிசிர் விட்டு, பாஷை மெருகேறி, விஷயம் துல்லியமாகி, பிறகு நம் ரத்தத்தில் தோய்ந்து, நம் மனத்தையும் மாண்பையும் ஊட்டி வளர்க்கும் காவியம் இலக்கியத்தின் ரசாயனம் இதுதான்.

இதற்கடுத்த கட்டத்துக்குத் துணிச்சலுடன், என் பேராசையில் போகிறேன். இலக்கியத்துக்கு அர்த்தம் என்று ஒன்று இருந்தால் அது இதுதான். நிகழ்ச்சியின் கிளர்ச்சி அடங்கி ஓய்ந்தபிறகு பின்னோக்கியேனும் வாழ்க்கையைக் காவியமாகப் பார்க்க நமக்குக் கண் ணில்லாமல் போனால், நாம் வாழவே லாயக்கற்றவர்கள். மன்னிப்பவனே மன்னிக்கப்படுவான். சிருஷ்டி, உயிரென்று பிடித்துப் போட்டபின் இருக்கும் வரை வாழ்வதைத் தவிர வேறு வழி என்ன?

இன்னொன்று, நேரே தொப்புளிலிருந்து வர்ணக் கடிதாசை வரவழைத்தேன் என்று கழைக்கூத்தாடி காட்டும் கண்கட்டு வித்தை அல்ல. கற்பனையைப் பற்றி என் எண்ணத்தை முன் பக்கங்களில் சொல்லி இருக்கிறேன். மீண்டும் சொல்கிறேன். சூரிய சாக்ஷியில் கற்பனையென்று தனியாக வால் முளைத்தது எதுவுமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/357&oldid=1534630" இலிருந்து மீள்விக்கப்பட்டது