பக்கம்:பாற்கடல்.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

353


இருந்தாப் போலிருந்து நடுப்பேச்சில் - ”இதோ பார் லசுஷ்மி! என் உயிர் போறது.” உடனே தலை தொங்கிப் போச்சு.

”இந்தா எடுத்துக்கோ.” தாம்பாளத்தில் தாம்பூலம் போல் அவளிடம் கொடுத்து விட்டான்.

”காலில் சுருக்குன்னுது. ரெண்டு மிளகு கொண்டு வாடி என்ன, தித்திக்கிற மாதிரி இருக்கே!” என்று அலட்டிக்கொண்ட மனிதரா இவர்?

உடல் உரத்திலும் தாத்தா ஒண்ணும் சோப்ளாங்கி இல்லை. ஒரு சமயம், அவரைத் துரத்திக்கொண்டு ஓடி வநத காளை மாட்டை அப்படியே அதன் கொம்புகளைப் பிடித்து நிறுத்திவிட்டார். மனிதனுக்கும் மிருகத்துக்கும் அந்தச் சிலகண நேரம் பலப் பரீட்க்ஷையில் கொம்புகளைக் கையோடு பிடுங்கிவிட்டாராம். இவர் கைகளில் கொம்புகளுடன் நிற்க, அது முகத்தில் குருத்தின் குருதி வழிந்து இன்னும் மிரண்டுபோய் ஓடி விட்டதாம். இவரைக் கோழையென்று கூற முடியுமா?

வீட்டில் கூட்டம் கூடியது. குமைந்தது. கலைந்தது. நாங்களும் சென்னை திரும்பினோம். அந்த வயதில் எனக்கு நினைவுபூர்வமாகப் பதிந்தது: செத்தவர் திரும்பி வரமாட்டார்கள். தாத்தா இனிமேல் கிடையாது. தெருவில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த உண்மை, வீட்டுக்குள்ளேயே வந்துவிட்டது.

1981 ஜூலை 5, ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை சுமார் நாலரை மணி.

வருடக் கணக்கில் ஒழுங்கான ராத்தூக்கம் இழந்து, கோழி கூவும் வேளையில் யாரையும் அயர்த்தும் அந்தக் கண் சொக்கலில், ”பால்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/359&oldid=1534634" இலிருந்து மீள்விக்கப்பட்டது