பக்கம்:பாற்கடல்.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

357


சம்பந்தம், தொடர்பு, எங்களுடையது எங்களுக்குத் தெரியும் என்று ஒரு குரல் அதட்டுகிறதே.

”எங்களைச் சொல், எங்களுக்குச் சொல்.”

ஒலியின் உருவே எழுத்தாகும்.

“எங்களை எழுது. எங்களுக்கு உருவம் கொடு. உயிரின் ஸ்வயாகாரம் தன் பிரக்ஞையில் முதலாக உணர்ந்த தனிமைக்கு, ‘குவா’வுக்கு உருவம் தா!”

எல்லா உருவத்துக்கும் பின்னால் பொதுவான ஒரு அரூபம் அது. நாதமோ உயிரோ எப்படியும் சதைக்குத் தவித்துக் கொண்டேயிருக்கிறது. அந்தத் தவிப்பே அதன் இயக்கம். அதன் அர்த்தமே அதன் தேடல்.

”இதையெல்லாம் எழுது எழுது”

கட்டளைகள் இவ்வளவு ஸ்பஷ்டம் இல்லை. ஆனால் ஏதோ ஒரு கட்டாயம் என் நெஞ்சில் சரசரவென வேர்விட்டு இலைவிட்டுத் துளிர் விட்டு வளர்வதை உணர்ந்தேன். இன்னும் சற்று நேரமோ காலமோ சென்றால் விருக்ஷம் என்னைப் பிளந்துவிடும்.

சரசரவென எழுந்து காலைக்கடன்களை முடித்துக் கொண்டு என் காப்பியை நானே போட்டுக் குடித்து விட்டு - வருடக்கணக்கில் பழக்கம் - வழக்கமான என் இடத்தில் Pad, பேனா ஸ்கிதம் அமர்ந்துவிட்டேன். ஆம், என்னத்தை எழுத? அன்று சேக்கிழார்க்கு ஆண்டவனே அடியெடுத்துக் கொடுத்தான். எனக்கு யார் கொடுப் பார்? அந்த நினைப்பே துக்கம் அடைத்தது. ஆனால் உடனே ஞாபகம் வந்துவிட்டது. ஏன் அடியெடுத்துக் கொடுக்கவில்லை?” ‘திக்கெவரம்மா!’ அதுவே எடுத்துக் கொடுத்த அடிதானே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/363&oldid=1534638" இலிருந்து மீள்விக்கப்பட்டது