பக்கம்:பாற்கடல்.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

358

லா. ச. ராமாமிருதம்


அந்த அடியிலேயே, கச்சேரி Setting-இல் கதை ஆரம்பமாயிற்று. வேகமாய்த் தன்னை எழுதிக்கொண்டு போயிற்று, எழுத எழுத, என்னை உந்திக்கொண்டு போகும் சக்தியின் உறிஞ்சலில் என் உடல் பலம் வடிவதை உணர்ந்தேன். ஆம், நிஸ்திராணியாகத் தலையணை மேல் சாய்ந்துவிட்டேன். என்றுமே இடுப்பொடிந்த மாடு. சாய்வு நாற்காலியோ சுருட்டி வைத்த படுக்கையோ இல்லாமல் பத்து நிமிடங்களுக்கு மேல் என்னால் உட்கார்ந்திருக்க முடியாது.

என் உடல் பிழிந்தெடுத்த மாதிரி ஆகிவிட்டது. கைவிரல்கள் தம் பிடி வன்மையை இழந்து துவண்டன. Stroke? பயம் வந்துவிட்டது. என் சோர்வை யார் அறிவார்? அதே சமயத்தில் உள்ளூர ஏதோ உவகை.

“சமையல் ஆயிடுத்து, குளிச்சிட்டு சாப்பிட வரவாள் வரலாம். எனக்கு ஆயிரம் ஜோலி கிடக்கு!” சமையலறையிலிருந்து அறைகூவல் வந்துவிட்டது. இன்று குளியலுக்கு முழுக்குப் போட்டுவிடுவோமா? ஆனால் மனம் வரவில்லை. அதுவும் இன்றைக்கா? ஒருவாறு சுதாரித்துக்கொண்டு எழுந்து கிணற்றடிக்குச் சென்றேன். சேகர் குளித்துக் கொண்டிருந்தான். மொண்டு விட்டுக் கொள்ள வேண்டும். நினைத்துப் பார்த்தாலே களை போடுகிறது.

”சேகர்!”—

சேகர் என்னை நிமிர்ந்து பார்த்தான்.

”என்னப்பா என்னவோ மாதிரியிருக்கேள்?”

”என்ன மாதிரி?”

”முகம் சிவந்து - இல்லை, சொல்லத் தெரியவில்லை. முகம் மாறி – Expression-”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/364&oldid=1534640" இலிருந்து மீள்விக்கப்பட்டது