பக்கம்:பாற்கடல்.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

362

லா. ச. ராமாமிருதம்


கொள்ள முடிகிறது. அதுவே ஒரு உத்தி, மிரட்ட மிரட்ட அவர்கள் Box Office உயர்கிறது. நான் அப்படியெல்லாம் எதிர்பார்க்க முடியுமா? எழுத்தாளர்கள் என்றும் பத்திரிகைகளை, அதுவும் ஸ்தாபனங்களைப் பகைத்துக்கொள்ள முடியாது கூடாது. இந்தக் கதையின் விதியை 'அமுதசுரபி'யுடன் முடித்திருக்கிறது என்று நான் எப்படி அப்போது கண்டேன்?

கதையைக் கையெழுத்துப் பிரதியில் கண்ணன் இப்போதுதான் படிக்க நேர்ந்தது.

கண்ணன் என்னுடைய அம்பிகாபதி. மதுரை Seminar-இல் மேடைக்கு அவனை வரவழைத்துச் சபையோருக்கு அப்படித்தான் பரிச்சயம் செய்வித்தேன். முடியைப் பின்னுக்கு வாரி விபூதிப்பட்டைகள் மூன்றும் தனித்தனியாக, சக்தியிடம் வேல் வாங்கின குமரன் போல் இருந்தான்.

இந்தக் கதையைப் பற்றிக் கண்ணன் சொன்னதைக் கேளுங்கள்:

"ஏற்கெனவே உங்களிடம் காணும் குணம் குறைகளுக்கு இந்தக் கதை விலக்கு அல்ல. ஆனால் - இந்த ஆனாலில்தான் விஷயமே அடங்கியிருக்கிறது. படித்துக்கொண்டு வருகையிலேயே உடனுக்குடன் வார்த்தைகள் அவைகள் காட்டும் செயலாக மாறி விடுகின்றன. மழையை வர்ணிக்கிறீர்கள். தலை மேலேயே கொட்டுவதைப் போலப் பிரமை தட்டுகிறது. ‘கௌரி விளக்கேற்றுகிறாள்’ என்றால் குத்துவிளக்கின் மேல் அவள் குனிகையில் புடவையின் சலசலப்பு உட் செவிக்குக் கேட்கிறது. கச்சேரியில் இருவர் குரலும் இதோ ஓங்கி ஜோடி சேர்ந்து, பக்ஷி வட்டமிடுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/368&oldid=1534644" இலிருந்து மீள்விக்கப்பட்டது