பக்கம்:பாற்கடல்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

33


தெரிந்தவரையில் ஒரு குளுமை இந்தப் பக்கங்களில் ஓடுகிறது. கடுஞ்சுரத்தில் நெற்றியில் முலைப்பால் நனைத்த துணியைப் போட்டுக்கொண்ட மாதிரி.

தாத்தா - தப்பு - தாத்தாவென்றால் அவருக்குக் கனகோபம் வந்துவிடும். அப்பாவென்று அழைப்போம். அப்பாவை அண்ணாவென்று அழைப்போம் - நின்றெரியும் சுடர்போல் நிமிர்ந்த ஒற்றைநாடியில், செக்கச் சிகப்பு. அம்முவாத்துக் கூட்டமே ஆண் பெண் அடங்கலாக எல்லாருமே சிவந்த மேனி - ஸோல்ஜர் கூட்டம். யாருக்கும் தோய்ந்த தோற்றம் கிடையாது.

தாத்தாவின் தம்பிமார்களும் தங்கைமார்களும் கம்பராமாயணத்தில் புகுந்து விளையாடுவார்கள். இத்தனைக்கும் பாடம் கேட்டவர்கள் அல்ல.

இந்தக் குடும்பத்தின் ரத்தத்திலேயே தமிழ் மணம் ஓடிற்று. எப்படி? தெரியாது.

என் சின்ன அத்தைப் பாட்டி, அதேசமயத்தில் என் தாயாரைப் பெற்றவள் - நன்னூல் நைடதம் படித்த வளாம். “ஸ்ரீமதி இந்தப் பாட்டில் இந்த வரி இப்படி வந்திருக்கே. இதன் இலக்கணம் சரியா?" என்று தாத்தா அவளை யோசனை கேட்டுக்கொள்வாராம். அவளும் கவிதைகள் புனைந்திருக்கிறாள்.

தாத்தாவின் தமையனார் ஐயாதான் எழுத்து வாசனைகூட இல்லாமல், வீட்டுக்குப் பூசணிக்காய் கட்டினமாதிரி. ஐயா, கீரிப்பிள்ளை - அது இஷ்டப்பட்டால் அடங்கின மாதிரியிருக்கும். ஆனால் முற்றிலும் அதை மனிதன் தன் இஷ்டத்துக்குப் பழக்கி விட முடியாது. தன் எதேச்சையை அதனால் விட்டுக் கொடுக்க முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/39&oldid=1533011" இலிருந்து மீள்விக்கப்பட்டது