பக்கம்:பாற்கடல்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

லா. ச. ராமாமிருதம்


ஒரு திவசம், திங்கள், நாள், கிழமையன்று சகோதர சகோதரிகள் அவரவர் குடும்பத்துடன் ராமசாமி அண்ணா வீட்டில் கூடும்போது வீடு அமர்க்களம்தான். எல்லோரும் வாட்டசாட்டம், கிங்கரவாகு. பட்ட சாலையில் ஏதோ ராவணசபை கூடின மாதிரிதான் இருக்கும். அவர்கள் பேச்சும் சர்ச்சையும்கூட அப்படித் தான். உற்சாகத்தில் (சில சமயங்களில் சொந்த சண்டையாகக்கூட மாறிவிடும்) உயர்ந்துவிட்ட உரத்த குரலில், கூடத்தில் நடக்கும் இலக்கிய சர்ச்சையைக் கேட்க ரேழியில், திண்ணையில், வாசலில், கூட்டம் கூடி நிற்கும். அந்த நாளில் மக்களுக்கு சுவாரஸ்யம் இது போன்ற விஷயத்தில்தான். இப்பத்தான் மாறிமாறி அலுக்காமல், விவித்பாரதி. அது கெட்டால் ரேடியோ சிலோன் - "மச்சானைப் பார்த்தீங்களா?” வருடக் கணக்கா மச்சானைத் தேடியாகிறது. மச்சான் கிடைத்துவிட்டாலும் தேடல் மட்டும் ஓயாது. வேண்டாம் என் ஒட்டத்தை என்னால் முடிந்தவரை நினைவின் சந்தோஷ ஜலங்களிலேயே நடத்திச் செல்லவேணும். ”ஏ சுந்தரம்” இம்போசிஷன் சித்தப்பாவின் தந்தை) - ”இந்த ராமன், காவிய நாயகன், தனியா என்னத்தைக் கிழிச்சுட்டான்? ஒரு லக்ஷ்மணன், ஹனுமான், ஒரு சுக்ரீவன், கேவலம் ஒரு வாணர சைன்யம் இல்லாவிட்டால் அவன் கதி என்ன? நாறிப்போயிருப்பான்.” ”விபீஷணன், ப்ராத்ரு த்ரோகியை மறந்துட்டியே! அண்ணனைக் காட்டிக் கொடுத்த பாவி!” “சுக்ரீவன் இன்னொரு ப்ராத்ரு த்ரோஹி (இந்தப் பிரயோகத்தில் என்ன மோகமோ? அண்ணன் பெண்டாட்டியைப் பெண்டாளுகிறானாம். சொந்த நியாயம் பேசும்போது வானரம், மற்ற சமயத்துக்கு அவதார புருஷன்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/40&oldid=1533012" இலிருந்து மீள்விக்கப்பட்டது