பக்கம்:பாற்கடல்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

லா. ச. ராமாமிருதம்


”அவள் என்ன நியாயமா ராஜவம்சமா? மண்ணில் கண்டெடுத்த குந்துமணிதானே? அவளே யார் ராக்ஷசியாகவே இருக்கலாம். இல்லாட்டா சிவதனுசைத் தூக்க முடியுமா? ராக்ஷசி அல்ல பேய். வேதவதி, அது இதுன்னு சொல்லிக்கிறது இருக்கட்டும். இந்த ராமாயணத்தைத் தற்காலிகத்துக்குக் கொண்டுவந்து இந்தச் சூழ்நிலையில் பாத்திரங்களை வெச்சுப் பார்க்கணும்! அப்போ லக்ஷ்மணன் இவ்வளவு சாதுவாயிருப்பானா?”

”இல்லை உன்மாதிரி பெண்டாட்டி தாஸனாகியிருப்பான்!” கூடம் முழுக்கக் கொல்லென்று உருட்டுச் சிரிப்பு.

”ஷட்அப்” கொஞ்சநேரம் மெளனம்.

”ஐயா எங்கே?” ஏதோ ஒரு குரல் கேட்கிறது.

“எங்கானும் யார் எருமை மாட்டுக்கேனும் பிரசவம் பார்த்துண்டிருப்பான்.”

“சரி சரி கொஞ்சம் எழுந்திருங்கோ எல்லோரும்.” என் பாட்டி சமையலறையிலிருந்து ஆஜராகிறாள். ”பெருக்கிட்டு இலை போடணும்.”

“என்ன சமையல் மன்னி!”

”கத்தரிக்காய் வெத்தல் குழம்பு, கத்தரிக்காய் வதக்கல் கறி.”

”பேஷ், மன்னி கை கேட்கணுமா ?”

”கத்தரிக்காய் ஏது - ஐயா கொண்டுவந்தானா, பக்கத்துக் கொல்லையிலிருந்து திருடி வந்தது? கொல்லைக்குச் சொந்தக்காரன் நாளைக்குப் போய்ப் பார்க்கிற போதுன்னா தெரியப்போகிறது!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/42&oldid=1533015" இலிருந்து மீள்விக்கப்பட்டது