பக்கம்:பாற்கடல்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

41


போது யானைக்குட்டி மாதிரி இருப்பார். அந்தநாள் பள்ளிக்கூட வாத்தியாரின் அங்கி, தலையில் டர்பன்; கழுத்துவரை மூடிய கோட்டு; பஞ்சகச்சம்; கம்பீரத் தோற்றம். எனக்கு அவரிடம் ஒரு திகைப்பு. வேட்டியில் ஒரு துளி அழுக்குக்கூடச் சேராது. கரையோரத்தில் கூடக் கிடையாது. கட்டிக்கொண்டதற்கு அடையாளம் லேசான கசங்கல். அதெப்படி? அந்தநாள் வெளுப்பா, மனிதனின் தன்மையா?

விதிப்பயன், பெங்களூர் வாசம் முடிந்து, சென்னைக்கு வந்ததும் ஆஸ்துமாவில் மாட்டிக் கொண்டு எலும்பும் தோலுமாகிவிட்டார். முகம் சுண்டி, உதடுகள் கசந்து, வயிறு முதுகோடு ஒட்டி, இந்தத் தோற்றம் நினைப்பில் பதிவாகத் தெரிகிறது. சென்னையில் இனி இருந்தால் ஆளைக் காண முடியாது என்று டாக்டர் பயமுறுத்தி அண்ணாவையும், அம்மாவையும், எங்களையும் கிராமத்துக்கு விரட்டிவிட்டார். காஞ்சிபுரத்துக்கு மூன்று மைல் தூரத்தில் ஐயன்பேட்டை கிராமம். இன்று அது கிராமமில்லை, நான் பையனாகி வளர்ந்து அறிந்த கிராமம் நாட்டிலேயே இனி கிடையாது எனத் தோன்றுகிறது.

உடலும் நொந்து, வேலை சரிந்து, மனம் நொந்து....

“என்னுடைய ஆஸ்தி என் குழந்தைகள்தான்.”

பரமசாது. சாது என்றால் அசடு என்கிற இந்நாள் அர்த்தத்தில் நான் சொல்லவில்லை. உள்ளும் புறமும் ஒன்று.

திலோமம் செய்து, ராமேஸ்வரம் போய்த் தவங்கிடந்து பெற்ற பிள்ளை நான். ஆகவே, பெரியோர்களின், பெற்றோர்களின் தனி ஆவல்கள், ஆசிகள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/47&oldid=1533143" இலிருந்து மீள்விக்கப்பட்டது