பக்கம்:பாற்கடல்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

லா. ச. ராமாமிருதம்


ஆசைகள், பாசங்களின் ஆவாஹனத்துக்கிடமாவதில் தனிப்பேறு இல்லையா?

அண்ணாவுக்குப் பிரியமான இன்னொரு சொல்: ”கடந்த ஞானியரும் மறப்பரோ மக்கள்மேல் காதல்?”

“ராம்!”

தசரதர் ராமனை ‘ராமா’ என்று அழைத்தாரா, ’ராம்’ என்று அழைத்தாரா?

இப்பவும் அழுகை வருகிறது. பயன்! நானும் கிழமாயாச்சு.

பின்னோக்கில் நினைவோட்டம் கற்கண்டு நேரம்.

நல்ல சமயங்களின் நினைப்பில் என்னை அவ்வப்போது இழக்க நேர்ந்தாலும் அவைதான் அமுத நேரங்கள். உண்மையாகக் காத்திருந்த வேளைகள், இவை என் சொந்த நேரங்கள் அல்ல நம்ம நேரங்கள்.

தருணங்கள் திரும்பி வாரா.

ஆனால் பெருந்திரு காத்திருப்பாள். தருணங்களின் மகிமையை அவள் அறிவாள். அவளே, அவளும் அதுதானே!

ஸன்னதியுள் நுழைகையிலேயே ஒரு அமைதி மேலே படர்வதை யாரும் உணர முடியும். ஏலக்காய் வாசனை போல் லேசாகச் சோகம் கலந்த அமைதி.

“பாட்டி! இதோ வந்திருக்கேன்”

தன் மக்களுக்கும், பேரன் பேத்திமார்களின் வம்ச வம்ச முறையீடுகளுக்கும், உலகத்தின் துயரங்கள் அனைத்துக்கும் சுமைதாங்கி ப்ரவிருத்த ஸ்ரீமதி ஆள் உயரத்துக்கு அம்பாள் நிற்கிறாள். சாந்த ஸ்வரூபி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/48&oldid=1533144" இலிருந்து மீள்விக்கப்பட்டது