பக்கம்:பாற்கடல்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

லா. ச. ராமாமிருதம்


கன்னியாகுமரி மேல் காணாமலே காதல் கொண்டு விட்டேன். என் பன்னிரண்டு வயதிலிருந்தே கன்னியாகுமரிக்குப் போய்வந்த உற்றார் உறவினர், இரவு வேளைக்கு வாசல் திண்ணையில் ஒதுங்கிய பைராகிகள், யாத்ரிகர் கதை சொல்லி விசிறிவிட்ட வியப்பு, சென்னைக் கடற்கரையின் மாலைக்காற்றில் அந்திவானத்து வர்ணஜாலங்களில், காலை வேளையில் கடல் விளிம்பில், சூரியனின் உதயவாசலில் கரையோரம் ஓடத்து நிழலில் மணலில் சாய்ந்தவண்ணம் சிந்தனையில் கொழுந்துவிட்டு, கண்டவர் கையோடு கொண்டு வந்த குங்குமம், கிளிஞ்சல் சரம், சாயமண், என் கனவிற்குக் கலவை கூட்டி, ஏக்கமாய்க் கட்டி அதுவே அதுவாய்ப் பந்தல் படர்ந்தது.

கன்னியாகுமரி, பேரிலேயே, பேருக்குள்ளேயே ஏதேதோ நீரோட்டங்கள் விளையாடுகின்றன. அவள் குமரி, நான் குமரன்.

கடலோரம் கோயில் (எல்லாம் அப்போ சொல்லக் கேட்டவைதான்). பாறை, பாறைகள், நெஞ்சிலும் பாறைகள், பாறைகளின்மீது அலைகளின் மோதல், சொல்லுள் அடைபடாது, என் கற்பனைக்கே சொந்தமான கதைகள், கவிதைகள், கதையின் நிழல்கள், நீழல் களின் காதைகள், கமகமப்புகள், கமகங்கள், இம்சைகள் சொல்ல முடிந்தவை. முடியாதவை, பேச்சில் முடியாதவை, முடிந்தாலும் பங்கிட்டுக் கொள்ள மனம் வராதவை - சொல்லச் சொல்ல இல்லை, தலை சுத்தறது.

இதை இந்த இடத்தில் சொல்லக் காரணம், மனோவாக்காய் சக்திகள் நம்மைப் பிடித்தாட்டும் வேதனையைச் சொல்லி ஆற்றிக்கொள்ள முயலுகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/50&oldid=1533146" இலிருந்து மீள்விக்கப்பட்டது