பக்கம்:பாற்கடல்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

லா. ச. ராமாமிருதம்


நேரும்போது துவரம்பருப்பு டப்பாவைத் திறந்தால், அதில் வேறு எதோ சிறுபருப்பு இருக்கும். பாசிப்பருப்பா? உளுத்தம்பருப்பா! குழப்பம், தவிப்பு, கோபம். வந்ததய்யா புதுக்குடித்தனத்தின் முதல் குஸ்தி! சீட்டு ஓட்டலின் தமாஷ் இதுதான்.

குடும்பத்தின் படிப்படியான விரிவாகத்தான், எனக்கு வயது ஏற ஏற உலகத்தைக் கண்டுகொண்டேயிருக்கிறேன் என்று ஒப்புக்கொண்டு, எனக்குக் குத்தியிருக்கும் முத்திரையில் பெருமை கொள்கிறேன்.

அன்றொரு நாள், ஒரு வீட்டுக்குப் போயிருந்தேன். அந்த வீட்டுக் குழந்தை ஓடிவந்து, “சேப்புத் தாத்தா!“ என்று குழறிக்கொண்டு என் கழுத்தைக் கட்டிக் கொண்டான். என்னை யாரென்று நினைத்தானோ, எதுவும் முன்பின் நினைக்காமலே அப்படிச் செய்யத் தோன்றிற்றோ? அறியேன்.

அவன் தாய் - “எங்கள் முரளிக்கு முக வேற்றுமை கிடையாது. யாரோடும் ஒட்டிக்கொண்டு விடுவான்.”

இதுபோன்ற அடையாளங்களுக்கு ஆதாரம் இல்லை என்று நான் நினைக்கமாட்டேன். உயிரின் உள்சரடு எங்கெங்கோ எப்படி எப்படி ஓடுகிறது என்று நாம் என்னத்தைக் கண்டோம்? உலகத்தை ஒரு குடும்பமாக என் எழுத்தில் நான் உழப்ப முயல்வதில் புதுமைகூட இல்லை.

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறேதும் அறியேன் பராபரமே.

ஸர்வே ஜுனாஸுகினோ பவந்து: Love thy neighbour as thyself.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/52&oldid=1533148" இலிருந்து மீள்விக்கப்பட்டது