பக்கம்:பாற்கடல்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

65


சுற்று போட்டுவிட்டது. கண்ணிமைக்கும் நேரத்திலும் மின்னலில் காலைச் சுற்றியதன் பல் பதியுமுன் பிடுங்கித் தூர எறிந்துவிட்டு, விட்டுப்போன பேச்சைத் தொடர்ந்து சர்வ சகஜமாகப் பேசிச் சிரித்துக்கொண்டு வந்தாராம். கூட வந்தவர்கள் சாக்ஷி.

”ஐயாவா? ஐயோ!” - வாயைப் பொத்திக் கொள்ளத் தவிர வேறு அவர்களுக்குத் தோன்றவில்லை.

மறுநாள் அதே இடத்தில் பிடாரன் கருநாகம் பிடித்தானாம்.

எட்டடி இது வெறும் நாகம் என்று கட்சி கட்டலாம். கட்டுபவர்கள் கட்டட்டும்.

ஐயாவுக்குப் படிப்பு வாஸனையோ, எழுத்து வாஸனையோ கிடையாது. இடுப்பில் ஒரு வாழைப் பட்டைக்கத்தி எப்பவும் செருகியபடி இருக்கும். படுக்கையில்கூட பக்கத்தில் அதுதான் அவருடைய மந்திரக்கோல். தாழ்க்கோல், காவல், வேலைக்காரன். குரு எல்லாம். அவருக்குச் சொன்னபடி கேட்கும்.

அவருக்கு உற்ற வயதில் மனைவி இறந்துபோனபின் இரண்டு குழந்தைகளுடன் தாத்தாவிடம் வந்து தங்கினவர்தான். மறுவிவாகம் செய்துகொள்ளவில்லை என்பதுகூடப் பெரிதல்ல. அவர் இருந்தவரை (நீண்ட வயதும் இருந்தார்) சதா மெல்ல அலைந்து கொண்டிருக்கும் ஊர் வாய் அவர் மேல் துளி மாசு கற்பிக்க வில்லை.

கோபம் வந்துவிட்டால் வாயில் வந்தபடி பேசுவார். மெய் கூசும். தன்னிடம் நியாயம் ஒடுங்குவது தெரிந்ததும் அதட்டி எதிராளியை அடக்கிவிடுவார். கைகூட மிஞ்சிவிடுவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/71&oldid=1533306" இலிருந்து மீள்விக்கப்பட்டது