பக்கம்:பாற்கடல்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

லா. ச. ராமாமிருதம்


”சமயத்துக்குக் கொடுக்கிறாளா பாருடா! நீங்கள் சேர்த்துவைத்து வீடு கட்டி வாழுங்கடா, தரித்திரப்பசங்களா !”

ஐயா வேலை பார்த்தவரை வீட்டின் ஓநாய்ப் பசி குறைந்து, பட்டினிச் சோர்வு கலைந்து, குடும்பத்துக்கே சற்று முகத்தெளிவுதான்.

தலைச் சிக்கெடுத்து, கோதி வாரி, முகம் மழித்து, பட்டை விபூதிக் குழைத்துத் தரித்து, டவாலியில் கையில் கிழங்குமாதிரி வெள்ளிப் பூண் போட்ட தடி (அர்த்தஜாமம் ஆனவுடன் தர்மகர்த்தா இரண்டையும் பிடுங்கிக்கொண்டு விடுவான்) யுடன் நிற்கையில் ஐயா களைதான்.

எல்லோரும் போனபிறகு வௌவாலுக்கும் துரிஞ்சலுக்கும், அவைகளிடும் புழுக்கைக்கும்தான் ஐயா காவல். நடராஜர் ஸன்னதிக்கெதிரே தூணடியில் துண்டை விரித்து, ஐயா காலை நீட்டிவிடுவார்.

பெருச்சாளி குடைந்து மடப்பள்ளியில் பாத்திரம் ஏதேனும் உருளும். கோயில் குளத்தினின்று குபிரென்று பாசி நாற்றம் கிளம்பும். பேரென்னவோ சிவகங்கை! நந்தவனத்தில் திடீரென்று பட்சி ஏதோ ‘க்றீச்...' பாம்பு பிடிச்சுடுத்தா?

ஆனால் இந்த மெய்க்காவல், முதல் ஜாமத்திலேயே மூணாம் ஜாமத்தின் அயர்ந்த குறட்டையில் நடக்கிறது.

ஆமாம்; மெய்யாகவே காவல் காக்க என்ன இருக்கிறது? நடராஜாவின் பஞ்சகச்சத்தை எவனாவது உருவிக்கொண்டு போக வரப்போறானா? விக்ரகத் திருட்டு இன்னும் Fashionஇல் வரவில்லை. திருடனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/74&oldid=1533308" இலிருந்து மீள்விக்கப்பட்டது