பக்கம்:பாற்கடல்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

லா. ச. ராமாமிருதம்


மாதம் ஆகும். மழையாவது அவ்வளவு சுருக்க, மழைக்காலத்தில் என் இஷ்டத்துக்காக நின்றுவிடுமா? ஐப்பசி கடைசியில் சம்பிரதாயப்படி குடமுழுக்குக்கு ஒரு பாட்டம் கொட்டக் காத்துக்கொண்டிருக்கிறது. வானொலி பயமுறுத்திக்கொண்டேயிருக்கிறது. இன்னும் 48 மணி நேரத்தில் - இன்னும் 36 மணி நேரத்தில். நெஞ்சில் அப்படியே வண்டல் இறங்குகிறது. பில்லா, ரங்காவுக்கும் ஒரு ஒரு நாளாக நெருங்க நெருங்க இப்படித்தானேயிருக்கும்?

பில்லா, ரங்காவுக்காக இரங்குகிறேனா, இது என் சொந்த பயமா ?

அட, நல்ல கதையாயிருக்கிறதே! என் சொந்த மனநிலைக்காக பில்லா, ரங்காவுக்காக, உலகம் நின்று விடுமா ? வெள்ளமென்றும், தீயென்றும், ரயிலென்றும் விபத்தென்றும் எவ்வளவு உயிர்ச்சேதம் நடந்துகொண்டிருக்கிறது? தவிர, ஏரோப்ளேன் hijack, தற்கொலை, இராக் - இரான் போர் அதுபாட்டுக்கு நடந்து கொண்டேயிருக்கிறது. பூகம்பம் மொத்தச் சகட்டில் வாங்கும் பலி பற்றவில்லையென்று இரானில், பிரதி தினமும் ஆளும் கட்சி பனங்காய் சீவுவதுபோல, எதிர்க்கட்சித் தலைகளைக் குலைகுலையாகச் சுட்டுத் தள்ளிக் கொண்டிருக்கிறது. உயிர் மிகவும் மலிவாகி விட்டது. காய்கறிகளின் விலைதான் தலைவிரித்தாடுகிறது. வியாபாரமும் இப்போதுதான் மும்முரம்.

Life Marches On. அது யாருக்காகவும், எதற்காகவும் பார்க்கவில்லை, காத்திருப்பதில்லை.

என் தங்கையின் சடலத்துக்கு நெருப்பு வைத்து விட்டுச் சுடுகாட்டிலிருந்து திரும்பியதும் அம்மா கதறுகிறாள்; "ராமாமிருதம், எனக்குப் பசிக்கிறதேடா !”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/94&oldid=1533367" இலிருந்து மீள்விக்கப்பட்டது