பக்கம்:பாற்கடல்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

லா. ச. ராமாமிருதம்


விட்டார். மாயாபஜார் ராக்ஷஸன் மாதிரி இருந்தார். முன்னுக்கும் பின்னுக்கும் ஏகத்தாறாகத் தள்ளி, உடல் சரிந்துவிட்டது. தலையிலும், மீசையிலும் பழைய கரேலும் பொலிவும் இன்னும் இருக்குமா? ஆனால் முகத்தின் இயற்கை கம்பீரமும், பின்னால் உத்தியோக ரீதியின் பலனாக அந்த கம்பீரத்தின் மேல் அதிகாரத்தின் வார்ப்பும் போய்விடுமா?

"ஒஹோ, சப்தரிஷி பிள்ளையா?” தொண்டையில் மணல் நறநறத்தது. "அம்மாப்பெண் மாதிரியே இருக்கையே! பேஷ், எங்களுக்கு உன் தாயார் ரொம்ப உசத்தி. செல்லம். அம்மா எப்படியிருக்காள் ?”

இவர் ப்ரதாபங்களுக்கு இந்த வரலாற்றில் இடமில்லை. ஆனாலும் தனிக்கதை பெறும். அசாத்திய தைரியம். ஒரு கொள்ளைக் கூட்டத்தையே தனியாக வளைத்துவிட்டாராம்!

சிதம்பரம் ஐயர், சுந்தரம் ஐயர், பிச்சு ஐயர் நன்றாகச் சம்பாதித்தனர். அவர்கள் தொழில் பார்த்த இலாகாக்கள் அப்படி.

ஐயாதான் தனக்கு உதவாத, ஊருக்குச் செல்லப் பிள்ளை.

தாத்தா (உஷ்! காது கேட்டால், கனவில் வந்து அதட்டுவார். ‘என்னடா தாத்தா? நீதான் வயசுக்கு முன்னால் தலை நரைச்சு கிழவனாயிட்டே!) அவர் உண்டு; அவர் பாட்டு நோட்டு உண்டு.

வக்கீலய்யா, எப்படியோ முண்டி அடித்து, பி.எல். தேறினாரே ஒழிய, தொழிலில் அதிர்ஷ்டமில்லை.

ஜி. சுப்ரமணிய ஐயருக்கு மாப்பிள்ளை ராசி கிடையாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/98&oldid=1533374" இலிருந்து மீள்விக்கப்பட்டது