பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. புகு வாயில் காண்டங்கள் : கம்ப ராமாயணத்தில் பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என ஆறு பிரிவுகள் உள்ளன. இந்தக் காண்டப் பெயர்கள் வால்மீகி தம் இராமாயண நூலில் வைத்த பெயர்களே. இந்த ஆறனுள் இங்கே எடுத்துக் கொண்டது பால காண்டம் ஆகும். பால காண்டம் பருவத்தால் பெற்ற பெயர். அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம் ஆகியவை செயல் நிகழ்ந்த இடத்தால் பெற்ற பெயர்களாகும். சுந்தர காண்டம் செயல் நிகழ்த்தியவர் பெயரால் பெற்ற பெயராகும். யுத்த காண்டம் செயலால் பெற்ற பெயராகும். பால காண்டத்தில், இராமனின் இளமைப் பருவத்தில் நிகழ்ந்தவை இடம் பெற்றுள்ளன. உட்பிரிவு : வால்மீகி தம் காண்டங்களின் உட்பிரிவுகட்குச் சருக்கம் என்னும் பெயர் தந்துள்ளார். கம்பர் தம் காண்டங்களின் உட்பிரிவுகட்குப் படலம் என்னும் பெயர் ஈந்துள்ளார். கம்பரின் பால காண்டத்தில் ஆற்றுப் படலம் முதலாகப் பரசுராமப்படலம் ஈறாக இருபத்து நான்கு படலங்கள் உள்ளன. இப்படலங்களில் கூறப்பட்டுள்ள நிகழ்ச்சிகளின் சுருக்க அறிமுகம் வருமாறு: