பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 177 புண்ணிலாம் பெரும் புழையில் கனல் நுழைந்தாலெனச் செவியில் புகுதலோடும் உண்ணிலாவிய துயரம் பிடித்து உங்த ஆர் உயிர் கின்று ஊசலாடக் கண்ணிலான் பெற்று இழந்தான் என உழந்தான் கடுந்துயரம் கால வேலான்' (12) முதலிலேயே வேல் மார்பில் புகுந்து உண்டாக்கிய துளையான புண் உள்ளது; அதில் நெருப்பு வைத்தாற் போன்று முனிவன் சொல் இருந்தது எனில், தயரதனுக்கு முதலில் இருந்த மனப்புண் என்ன என்பதைக் காண வேண்டும். கண்ணில்லாத முதிய பெற்றோர்களின் பிள்ளையை யானையெனக் கருதித் தயரதன் முன்பு கொன்று விட்டான். அஃதறிந்த முதியவர்கள், நீயும் மகனைப் பிரிந்து உயிர் விடுவாயாக எனக் கெடுமொழி (சாபம்) இட்டனர். அந்த அச்சம் எப்போதும் தயரதன் உள்ளத்தில் இருந்து கொண்டுள்ளது. அதுதான் முதலில் வேல் பாய்ந்த புண் போன்றதாகும். அதற்கு ஏற்ப, இப்போது முனிவர், தயரதனின் உயிரான இராமனைப் பிரியச் செய்கிறார். இது வேல் பாய்ந்த புண்ணில் கனல் நுழைந்ததைப் போன்றது. துயரம் பிடித்துத் தள்ளுவதால் உயிர் போவதா வருவதா என ஊசலாடிற்று. ஊசலை ஆட்டுவது துயரம்; பல்லாண்டுக் காலம் பிள்ளைகள் இல்லாமல் வருந்தித் தவம் செய்து பிள்ளைகள் பெற்றவன், இப்போது மீண்டும் தனது உயிரான இராமனைப் பிரிய நேர்வதால், கண்ணிலான் பெற்று இழந்ததான உவமை கூறப்பட்டுள்ளது. பகைவரைக் கொல்லும் காலனைப் போன்ற வேல். படையுடைய மாவீரனான தயரதனே இவ்வாறு துயருற்றான் என்பதைக் கால வேலான்’ என்னும் தொடர் அறிவிப்பதிலுள்ள நயம் சுவைக்கத் தக்கது.