பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 பால காண்டப் நகரப் படலம் மதிலின் எழுச்சி: வெண்மையான திங்களுக்குச் செம்பஞ்சுக் குழம்பு ஊட்டினாற் போன்றிருக்கும் நகங்களையும், தாமரை போன்ற அடியையும், கொடி போன்ற இடுப்பையும், இளநீர் போன்ற மார்பகங்களையும்,மூங்கிலை வளைத்து அமைத்து வைத்தாற் போன்ற தோளையும், இன்சொல்லையும் உடைய மங்கையர் வாழும் அயோத்தி நகரம் போன்ற அழகு உடையதாகத் தேவர் உலகம் இருக்குமா என ஆய்வு செய்வதற்காக உயர்ந்ததுபோல் அயோத்தி நகர மதில்கள் வானளாவ உயர்ந்துள்ளனவாம்: "பஞ்சி வான் மதியை ஊட்டிய தனைய படர் உகிர், பங்கயச் செங்கால், வஞ்சிபோல் மருங்குல், குரும்பைபோல் கொங்கை, வாங்கு வேய் வைத்த மென் பணைத்தோள், அஞ்சொலார் பயிலும் அயோத்திமா நகரின் அழகுடைத்தோ என அறிவான் இஞ்சி வான் ஓங்கி இமையவர் உலகம் காணிய எழுந்தது ஒத்துளதே' (9) உகிர்=நகம். மருங்குல் = இடை. வஞ்சி=கொடி. குரும்பை = இளநீர். தமிழகத்தில் தென்னார்க்காடு மாவட்டத்தில், தென்னைமரத்தில் பம்பரம் அளவு உள்ள சின்னஞ்சிறு பிஞ்சுக் காயையே குரும்பை என்பர். மற்ற பகுதிகளுள் சிலவற்றிலும் மலையாளத்திலும் இலங்கை யிலும் இளநீர் குரும்பை என்று வழங்கப்படுகிறது. இஞ்சி = மதில். இமையவர்= தேவர். மதில் இயற்கையாக வானளாவ உயர்ந்திருக்கவும், தேவர் உலகம் அயோத்திக்கு ஒப்பாகுமா என ஆய்வு செய்வதற்கு உயர்ந்ததாகக் கம்பர் தற்குறிப் பேற்றம் செய்துள்ளார். எனவே, இந்தப் பாடல் தற்குறிப் பேற்ற அணி அமைந்த தாகும்.