பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 79. அரசியல் படலம் நான்கு கடல் : தயரதன் இரப்பவர்களாகிய கடலை, அவர்கட்கு. வேண்டியவற்றையெல்லாம் நிரம்பக் கொடுத்துக் கடந்தான் ; இனி இரப்பவர்கள் இல்லை. அறிவு என்னும் அளக்கரை (கடலை), அளவற்ற நுட்பமான கருத்துச் செறிந்த, நூல்களை ஆராய்ந்தறிந்து கடந்தான்; அதாவது அவன் கல்லாத கலை இல்லை. பகைவர்களாகிய வேலையை (கடலை), வாளால் கொன்று வென்று கடந்தான்; இனி அவனுக்குப் பகை இல்லை. செல்வத்தால் நுகரக் கூடிய இன்பமாகிய பெளவத்தை (கடலை), முற்றும் துய்த்துக் கடந்தான்; அவன் நுகராத இன்பம் இல்லை. பாடல்:

ஈந்தே கடந்தான் இரப்போர் கடல்;

எண் இல் துண் நூல் ஆய்ந்தே கடந்தான் அறிவுஎன்னும் அளக்கர்; வாளால் காய்ந்தே கடந்தான் பகைவேலை; கருத்து முற்றத் தோய்ந்தே கடந்தான் திருவின் தொடர் போக பெளவம்' (5) இரப்போர் கடல், அறிவுக் கடல், பகைக் கடல், இன்பக் கடல் ஆகிய நான்கு கடல்களையும் தசரதன் கடந்த முறையைக் கம்பர் கூறியிருப்பது நயமாயுள்ளது. ஒரே பொருளுடைய கடல், அளக்கர், வேலை, பெளவம் என்னும் நான்கு சொற்களும் இப்பாடலில் இடம் பெற்றுள்ளன. ஒரே பொருளுடைய வெவ்வேறு சொற்கள் பின்னே தொடர்ந்து வந்தமையின், இந்த அமைப்பு, பொருள் பின் வருநிலை அணி எனப்படும். கடந்தான் என்னும் ஒரே சொல் நான்கு முறை தொடர்ந்து, வந்திருப்பது, சொல் பின் வருநிலை அணி எனப்படும்.