பக்கம்:பாலும் பாவையும்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 'கிடையாது; கிடையவே கிடையாது!’ ‘காதல் தெய்வீகமானது என்கிறார்களே, அந்தக் காதலின் பலன் இதுதானா?” 'இதுதான்; இதுவேதான்!” அவள் தன் கை விரல்களை நெரித்தாள்; விழித்தாள்; நெட்டுயிர்த்தாள். 'கடைசியில் சமூகத்தின் அனுதாபத்தை நான் செத்துத்தானா பெற வேண்டும்? சாகாமல் பெறமுடியாதா?’ 'முடியாது; முடியவே முடியாது!’ அவள் தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள் "ஐயோ! ஆண்களுக்கு ஒரு நீதி, பெண்களுக்கு இன்னொரு நீதியா?-இந்த அக்கிரமத்துக்கு இன்னும் என்னைப்போல் எத்தனை பெண்கள் பலியாக வேண்டும்? உங்களுடைய இதயத்தில் ஈரம் இல்லையா? அந்த ஈரமற்ற இதயத்தை எங்களுடைய கண்ணீராவது நனைக்கவில்லையா?-சீர்திருத்தம், சீர்திருத்தம் என்று வாய் ஓயாமல் அடித்துக் கொள்ளும் இளைஞர் உலகம் இந்தக் கொடுமையை இன்னும் எத்தனை நாட்களுக்குச் சகித்துக்கொண்டிருக்கப் போகிறது?’ அவள் உள்ளம் குமுறிற்று, கண்கள் கலங்கின. 'நாம் சாவதற்கு முன்னால் அம்மாவை ஒருமுறை-ஒரே ஒரு முறை-பார்த்துவிட்டால்...? அவள் மூடிய கண்களைத் திறந்தாள். 'சியாமளா இருக்கும் தெருவுக்கு அடுத்த தெருவில்தானே அம்மா இருக்கிறாள்? அங்கே போய் விசாரித்தால் யாராவது சொல்ல மாட்டார்களா?” அவள் திரும்பினாள் இப்பொழுது அவளுடைய நடையில் வேகமில்லா விட்டாலும் உள்ளத்தில் ஒரு சிறு நம்பிக்கை உதயமாகியிருந்தது