பக்கம்:பாலைக்கலி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 கலித்தொகை மூலமும் உரையும் தான். இன்றுமட்டும் அது புதிதாக நிகழ்வதன்று. நல்ல நெறியுடையவர் சொற்களைப் பேசும் போது, தாய் உயிர்பெய்து பெறும் குழந்தையைப்போல, அதனைக் கருத்துடன் பேணுவர். ஒன்றைச் சொல்லிவிட்டுப் பின் அதனை மறந்து வேறொன் றுக்குத் தாவிச் செல்லவே மாட்டார்கள். "தாதுகளைத் தேடியுண்ணும் வண்டினம் போல’ அவளுடன் கூடி இன்புற்று நின்றீரே! அந்த அழகை எந்நாளும் அழியாதவாறு பேணி, அவளுக்கு நீர் தந்துகொண்டிருக்கும் போது, ஏதுமற்றவர் பொருளாசை பற்றிக் கூறுவனவெல்லாம் எதற்காகவோ?’ நறுமணமிக்க முல்லையின் முகைகளை, நேரிதாக வைத்தாற் போன்று அமைந்த, பல்வரிசை ஒழுங்கினை முன்னர்ப் பாராட்டினாய். அப்போது, எம் இளமையை உணர்ந்து தானே கூறினாய். அஃதன்றிப் பருவம் முதிர்ந்து பற்கள் வீழ்ந்துபோன எம் தளர்நிலையையோ சுட்டி நீ'பாராட்டினாய்? நெய் பூசி வாரி, நீலமணி ஒளிவிட்டாற் போல ஐவகையாக முடித்திருந்த எம் கூந்தல் அழகினைத்தான் பாராட்டினாயே அல்லது, அக்கூந்தல் வளம்கெட, அதனைப் பொய்யாகப் புனைந்த நிலையையோ குறித்து நீ பாராட்டினாய்? குளம் அழகு பெறச் செய்யும் தாமரையின் மெல்லிய முகைபோன்ற எம் இளமுலைகளைப் பாராட்டினாயே அல்லாமல், எம் மார்பின் முலைகள் தளர்ந்து கிடக்கும் முதுமையையோ பாராட்டினாய்? ஐயனே! சுட்ட பசும்பொன்னின் ஒளிபோன்று விளங்கும் தேமல்கள் வாடக், கதிரவன் காய்கின்ற கானல்வழியே செல்ல முயல்கின்றாயே? துன்பமானது எம்மைத் தொடர்ந்து வந்து வருத்துகின்ற இந்நாளிலே, சொல்பிறழ்ந்து மாறிவிட்ட உம்மைத் தடுத்து நிறுத்துவதற்கு எம்மிடம் ஆற்றல் ஏதும் உண்டோ? ஏதுமில்லையாதலின், நும் விருப்பம்போல் நீர் கருதியதையே செய்வீராக! விளக்கம்: 'உன் ஆசை மிகுந்தபோது எம்மைப் புகழ்ந்து புகழ்ந்து வேண்டினாய். யாம் இளமை கெட்டுப் போய் விட்டோமோ? இப்பொழுது யாம் நின் துணை வேண்டும் போது, ஒதுக்கிச் செல்ல நினைக்கின்றாயே? நீ சொன்ன சொல் போற்றாதவன் என்று இடித்துக் கூறுகிறாள், தோழி. சொற்பொருள்: 9. முல்லை நேர் முகை - வரிசையான் முல்லை அரும்புகள். நிரைத்த - வரிசையாக அமைத்த.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/60&oldid=822054" இலிருந்து மீள்விக்கப்பட்டது