பக்கம்:பாலைக்கலி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Vi இன்னொரு சிறப்பாவது, இதன் பாலுள்ள ஐந்தில் இரண்டைப் பாடியவர் சேரரும் சோழருமான தமிழரசர் குடியிற் பிறந்தாராக விளங்குவதாகும். அவர்தாம், தம் செய்யுட்களில் பாண்டி நாட்டை மனங் கலந்து போற்றிப் பாடியிருப்பது, பாண்டியரின் பண்பு மேம்பாட்டிற்கு நல்ல சான்றாகும்; அவர்தம் தமிழ்த் தலைமையின் செவ்வியை உணர்த்துவதுமாகும். தமிழறிந்தார் கற்றறிந்து இன்புறுதலின் பொருட்டாகத் தம்முடைய பெரும்புலமையால் இச் செய்யுள்களைச் செய்து வழங்கினோர், 1. பாலை பாடிய பெருங்கடுங்கோ, 2. கபிலர், 3. மருதனிள நாகனார், 4. சோழன் நல்லுருத்திரன், 5. ஆசிரியர் நல்லந்துவனார் என்போர் ஆவர். இவர்களின் சீர்த்த செய்யுட்களுக்கு முதலில் உரைகண்டவரோ, உச்சிமேற் புலவர் கொள்ளும் ஆசிரியர் நச்சினார்க்கினியர் ஆவர். ஏடுகளைத் தேடி எடுத்து, நன்கு ஆராய்ந்து, முதன் முதலாக இதனை அச்சேற்றித் தந்த பெருந்தகையார், திரு. சி. வை. தாமோதரம் பிள்ளை அவர்களாவர். ஆராய்ச்சிக் குறிப்புகளுடன், மீண்டும் அச்சேற்றிப் பின்னாளில் உதவியவர், திரு. இ. வை. அனந்தராமையர் அவர்களாவர். இவர்களின் அரிய முயற்சிகளின், உழைப்புகளின் பயனாகவே, கலித்தொகை தமிழன்பர்களின் அறிவுக்கு விருந்தாகியது; அனைவரையும் களிப்பூட்டியது. இவர்கட்குத் தமிழறிந்தாரின் நன்றிக்கடன் மிகமிகப் பெரிதாகும். அனைவரும் எளிதிற் கலித்தொகையைக் கற்று இன்புறுவதற்கு உதவியாகத் தெளிவுரை அமைப்பு ஒன்றை எழுதி வெளியிட எண்ணினேன். அது, 1958 மார்ச்சில் முதல் முதலாக வெளிவந்தது. பலரின் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. அதன் இரண்டாம் பதிப்பு மார்ச்சு, 1965இலும், மூன்றாம் பதிப்பு மார்ச்சு 1971இலும் வெளிவந்தன. இப்போது, நான்காம் பதிப்பாகப் புதிய சில சேர்க்கைகளுடன் புதிய பதிப்பாக வெளிவருகின்றது. இத் தெளிவுரை அமைப்பு, செய்யுள்களின் பொருளை மேலோட்டமாக விளக்கிச் சொல்வது மட்டுமே யாகும். ஒவ்வொரு செய்யுளிலும் பொதிந்து கிடக்கும் அரிய நயங்களையும், நுண்பொருள் வளங்களையும் அறிந்தறிந்து இன்புறுவதற்கு, இஃது ஒரு நல்ல துணையாக, வழிகாட்டியாக அமையும் என்று நம்புகிறேன். வாழ்க தமிழ் வளம்! வளர்க தமிழ் ஆர்வம்! புலியூர்க் கேசிகன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/8&oldid=822075" இலிருந்து மீள்விக்கப்பட்டது