பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - இல்லறவியல் - அன்புடைமை

79


மேல் வைத்துக் கூறுவது மரபாதலாலும், "தம்மிற்றம் மக்க ளறிவுடைமை” என்று ஆசிரியரும் பொதுப்படக் கூறியிருப்பதாலும், "பெண்ணியல்பால் தானாக வறியாமையாற் 'கேட்ட தாய்' என்றார்" என்று பரிமேலழகர் கூறியது தவறாம். இனி, ஔவையார், காக்கைபாடினியார், நச்செள்ளையார், காவற் பெண்டு, குறமகள் இளவெயினி, பூதப்பாண்டியன் தேவியார், பேய்மகள் இளவெயினி, வெண்ணிக் குயத்தியார், வெறிபாடிய காமக்கண்ணியார் முதலிய பண்டைப் புலத்தியரை அவரும் அறிந்திருந்தமையால், அவர் கூற்று நெஞ்சார்ந்த பொய்யுமாம். மகன்மேலுள்ள அன்புப் பெருக்கால் அவனறிவை மிகுத்தெண்ணும் தாய்க்கு நடுநிலை யறிஞர் பாராட்டு, முழு நம்பிக்கை யுண்டாக்கும் என்பதே கருத்து.

70.மகன்றந்தைக் காற்று முதவி யிவன்றந்தை
யென்னோற்றான் கொல்லெனுஞ் சொல்.

(இ-ரை.) தந்தைக்கு மகன் ஆற்றும் உதவி - தான் பிறந்ததினின்று தன்னை வளர்த்துக் கல்வி கற்கவைத்து, உலகிற் பிழைப்பதற்கு ஒரு தொழி லிற் பயிற்றி, மணஞ் செய்வித்து மனையறம் படுத்தி, தன் தேட்டிலும் ஒரு கூறளித்த தன் தந்தைக்கு, மகன் செய்ய வேண்டிய கைம்மாறாவது; இவன் தந்தை என் நோற்றான்கொல் எனும் சொல் - தன் அறிவாற்றலையும் நற்குண நற்செயல்களையும் கண்டோர், இவன் தந்தை இவ் வருமந்த மகனைப் பெறுதற்கு என்ன கடுந்தவஞ் செய்தானோ என்று வியந்து கூறுஞ் சொல்லை, அவர் வாயினின்று தானாக வரச் செய்தலாம். சொல் என்றது சொல்லை வருவித்தலைக் குறித்தது. 'கொல்' ஐயம் குறித்த இடைச்சொல். தந்தை நெடுங்காலமாகச் செய்த பல்வேறு பெரு நன்மைக்கும் மகன் செய்ய வேண்டிய கைம்மாறு ஒரு சொல்லே என்று, ஒருவகை அணிநயம்படக் கூறினார். இதனால், தந்தை செய்த நன்றிக்குச் சரியாக ஈடுசெய்தல் அரிதென்பதும், "தென்புலத்தார் கடனைத்" தீர்க்க நன்மக்களைப் பெறுதல், பெற்றோர் தம் விருப்பம்போற் செய்துகொள்ளக் கூடிய செயலன்றென்பதும், பெறப்படும்.

அதி. 8 - அன்புடைமை

அதாவது, இல்லறத்தானும் அவன் வாழ்க்கைத் துணையாகிய, மனைவியும் தாம் பெற்ற மக்களிடத்துக் காட்டிய அன்பை, துறவோர்ப் போற்றல், விருந்தோம்பல், ஒப்புரவொழுகல், இல்லார்க் கீதல், இரப்போர்க் கிடுதல் முதலிய இல்லற வினைகள் நடைபெறற்கேற்பப் பிறரிடத்தும் உடையராய்