பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

திருக்குறள் தமிழ் மரபுரை

முன்னுரை

1. தமிழ நாகரிகம் ஆரியர் வருகைக்கு முற்பட்டமை

தமிழன் பிறந்தகம் குமரிநாடென்பதும், தமிழ நாகரிகம் ஆரியர் வருகைக்குப் பல்லாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டதென்பதும், இன்னும் சரிவர அறியப்படாமையால், தமிழரின் முன்னோர் கிரேக்கநாட்டுப் பக்கத்தினின்று வந்தவரென்றும், ஆரிய நாகரிகத்தைப் பின்பற்றியவ ரென்றும், தமிழ் பன்மொழிக் கலவையென்றும் வடஇந்தியாவிலுள்ளவ ரெல்லாரும் ஆரியரென்றும், வடஇந்தியாவிலும் சமற்கிருதத்திலு முள்ளவையெல்லாம் ஆரியர் கண்டவை யென்றும், உண்மைக்கு நேர்மாறாகச் சொல்லப்பட்டும் எழுதப்பட்டும் வருகின்றன.

உலகில் மிகப் பழைமையானது குமரிக்கண்டத் தமிழ்நாடென்பதையும், முதன்முதல் தோன்றியது தமிழ் நாகரிக மென்பதையும், தமிழ் உலகமுதல் உயர்தனிச் செம்மொழி யென்பதையும், அறிந்தாலொழிய, தமிழ்மொழியிலக்கிய நாகரிகப் பண்பாட்டின் உண்மையான இயல்பையும் உயர்வையும் உணரமுடியாது.

2. தமிழர் வாழ்க்கைக் குறிக்கோள்

உலகில் இன்பத்தை நுகரவேண்டுமென்பதே பொதுவாக எல்லா மாந்தர்க்கும் இயல்பான நோக்கம். அவ் வின்பத்திற்குப் பொருள் இன்றியமையாதது. பொருள் சிறந்தபின், “தனக்கு மிஞ்சித் தானம்”, “பாழாய்ப் போகிறது பசுவின் வாயிலே" என்னும் நெறிமுறைப்படி, தான் நுகர்ந்ததுபோக எஞ்சியதை உழைக்க வியலாதவரும் துறவியருமான பிறர்க்கு அளிப்பதும் இயல்பே. இதுவே அறமெனப்படுவது. இங்ஙனம் இன்பம், பொருள், அறம் என்னும் முக்குறிக்கோள் இயற்கையாகத் தோன்றின. அறத்தைச் சிறப்பாக நோக்காது இன்பத்தையே நோக்கும் இன்பநூல்களும் இலக்கண நூல்களும் இம் முப்பொருளையும் இம் முறையிலேயே குறிக்கும்.