பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214

திருக்குறள்

தமிழ் மரபுரை



(6) நிறை (தாரணை) - மனத்தை ஒருவழி நிறுத்துகை.

(7) ஊழ்கம் (தியானம்) - மனத்தை இறைவன்மேற் செலுத்துகை.

(8) ஒன்றுகை (சமாதி) - மனம் இறைவனொடு ஒன்றாகப் பொருந்துகை.

ஒருக்கம், நிறை, ஊழ்கம் என்னும் மூன்றும் முறையே தொகைநிலை, பொறைநிலை, நினைவு என்னும் சொல்லாலும் குறிக்கப்பெறும்.

இருவகைப் பற்றையுந் துறந்தபின் இறைவன் பற்றையே இறுகப் பற்றல் வேண்டுமாதலின், இம் மெய்யுணர்தல் துறவின் பின் வைக்கப்பட்டது. இதுபற்றியே, துறவதிகாரத்தின் இறுதியிலும் 'பற்றற்றான் பற்றினைப் பற்றுக' என்று இதற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.

351. பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரு
மருளானா மாணாப் பிறப்பு.

(இ-ரை.) பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும் மருளான் மெய்ப்பொரு ளல்லாதவற்றை மெய்ப்பொரு ளென்றுணரும் மயக்கவுணர் வினால்; மாணாப் பிறப்பு ஆம் - சிறந்த வீடுபேறின்றி இழிந்த பிறவியே உண்டாம்.

மயக்க வுணர்வாவது, இறைவனில்லை யென்றும், உலகம் தானாக இயங்குகின்ற தென்றும், நற்காட்சி, நல்லோதி (நன்ஞானம்), நல்லொழுக்கம் என்னும் மூன்றும் வீடுபேற்றிற்குக் கரணகம் (காரணம்) என்றும், உருவம், நுகர்ச்சி,குறிப்பு, எண்ணம், அறிவு என்னும் ஐங்கந்தமும் கெடுவதே வீடு பேறென்றும், தம் மனம்போனவாறு பிறழவுணரும் திரிபுணர்ச்சியாம். வீட்டையளிப்பவன் இறைவனே யாதலின், அவனருளின்றி எவனும் வீடு பெற வியலாதென்பதாம். வீடுபெறாவிடத்து நரகர், விலங்கு. மக்கள், தேவர் என்னும் நால்வகைப் பிறவிவகுப்பில் முன்போ லுழலுவதே திண்ணம். அப்பிறப்புத் துன்பமேயாதலின் 'மாணாப்பிறப்பு' என்றார். இதனால் திரிபுணர்ச்சி பிறப்பிற்குக் கரணகமாதல் கூறப்பட்டது.

352. இருணீங்கி யின்பம் பயக்கு மருணீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.

(இ-ரை.) மருள் நீங்கி மாசு அறு காட்சியவர்க்கு - மயக்கம் நீங்கித் தூய அறிவையடைந்தோர்க்கு; இருள் நீங்கி இன்பம் பயக்கும் - அத் தூய அறிவு நரகத்துன்பத்திற்கேதுவான பிறப்பை நீக்கி வீட்டின்பத்தை நல்கும்.