பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - துறவறவியல் - மெய்யுணர்தல்

215


மாசறுகாட்சி, தூய அறிவு, வாலறிவு, மெய்யறிவு என்பன ஒருபொருட் சொற்கள். ஐயந்திரிபற்றது தூய அறிவு. கீழே நீண்டு கிடப்பதொன்றைக் கயிறோ பாம்போ என்று ஐயுறுவது ஐயம். கயிற்றைப் பாம்பென்றும் பாம்பைக் கயிறென்றும் பிறழவுணர்வது திரிபு. கயிற்றைக் கயிறென்றும் பாம்பைப் பாம்பென்றும் உள்ளவாறுணர்வது தூய அறிவு. மருள், மயக்கம், திரிபு, பொய்யறிவு என்பன ஒருபொருட் சொற்கள். நரகத்தைக் குறிக்கும் இருள் என்னுஞ் சொல் இங்கு அதற்கேதுவான பிறப்பைக் குறித்தது. 'நீங்கி' என்பது நீங்கியபின் என்னும் பொருளது.

353. ஐயத்தி னீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வான நணிய துடைத்து.

(இ-ரை.) ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு - பல கவர்பட்ட ஐயம் நீங்கி மெய்யறிவு பெற்றார்க்கு; வானம் நணியது உடைத்து - தாம் இருக்கும் நிலவுலகத்தினும் வீட்டுலகம் நெருங்கியதாம்.

ஐயமாவது, கடவுளும் இருவினைப் பயனும் மறுபிறப்பும் விண்ணுலக வீடுகளும் உண்டோ இல்லையோ என ஒருவழியுந் துணிபின்றி நிற்றல். எல்லா மதங்களும் தனித்தனி பிறவற்றொடு மாறுபட்டுத் தன்தன் கொள் கையே மெய்யெனக் கூறுதலால். அவற்றுள் எது மெய் எது பொய்யென்று ஓகப்பயிற்சியில் முதிர்ச்சி பெற்றார் தம் பட்டறிவால் உணர்வராகலின், அவரை 'ஐயத்தினீங்கித் தெளிந்தார்' என்றும், அம் மெய்யறிவு வளர வளர வீடுபேற்றுறுதி மிகுமாதலின் 'வையத்தின் வான நணிய துடைத்து' என்றுங் கூறினார். இதனால், ஐயவுணர்வு பிறப்பிற்குக் காரணமாதலுங் கூறப்பட்டது.

354.ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர் வில்லா தவர்க்கு.

(இ-ரை.) மெய் உணர்வு இல்லாதவர்க்கு - மெய்யறிவைப் பெறாத வர்க்கு: ஐ உணர்வு எய்தியக் கண்ணும் பயம் இன்றே - புலன்களால் ஐந்தாகிய வுணர்வு அவற்றைவிட்டுத் திரும்பித் தமக்கு வயப்பட்ட விடத்தும், அதனாற் பயனில்லையாம்.

ஐந்தாகிய வுணர்வு, ஐம்புலன்மேற் செல்லும் மனம். அதை யெய்து தலாவது புலன்மேற் செல்லாதவாறு மடக்கி ஒருவழி நிறுத்தும் நிறை. சிறப்பும்மை எய்துதற் கருமையை யுணர்த்திற்று. இக் குறளாலும் மெய்யறிவுடை யார்க்கே வீடுபேறென்று மெய்யறிவின் இன்றியமையாமை கூறப்பட்டது.