பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - துறவறவியல் - மெய்யுணர்தல்

217


ஒருவன் மாறிப் பிறந்தாலொழிய வீடுபெற முடியாதெனின், மாறிப் பிறத்தலென்பது மனமாற்றத்தையே குறிக்குமென்றும்;

தேங்காயுடைத்துத் தெய்வ வழிபாடு செய்ய வேண்டுமெனின். தேங்காய் உடைந்து நீர் சிந்தி வெண்மையாய்த் தோன்றுவது போல், வழி படுபவன் தான் செய்த தீவினைபற்றி உள்ளமுடைந்து கண்ணீர் சிந்தித் தூய்மையாக வேண்டுமென்றும்;

"இருட்டறை மூலையி லிருந்த குமரி
குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக்
குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி
மருட்டி யவனை மணம்புரிந் தாளே” (திருமந். 1514)

என்றால், தொடக்கமிலியாக அறிவுக் கண்ணின்றி யிருந்த ஆதன் (ஆன்மா), இறைவன் திருவருளால் கண் திறக்கப்பெற்றுப் பேரின்ப வீட்டின் மாண்பையும் பிறவித் துன்பத்தின் கொடுமையையும் உணர்ந்து, இருவகைப் பற்றுந்துறந்து பிறப்பு நீங்கி இறைவன் திருவடியையடையும் என்றும் உணர்தல்.

356.கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.

(இ-ரை.) ஈண்டுக் கற்று மெய்ப்பொருள் கண்டார் - இம்மை மக்கட் பிறப்பில் மெய்ப்பொருள் நூல்களைக் கற்றும் பட்டறிவுள்ள மெய்யோதியரால் செவியறிவுறுத்தப் பெற்றும் மெய்ப்பொருளுணர்ந்தவர்; மற்று ஈண்டு வாரா நெறி தலைப்படுவர் - மீண்டு இப் பிறப்பின்கண் வராத வழியைப் பெறுவர்.

உலகநூற் கல்வி போன்றே மெய்ப்பொருட் கல்வியும் பல்வேறு நிலையிற் பல்வேறு ஆசிரியர்பாற் கற்றுங் கேட்டுமறிய வேண்டியிருப்பதால் 'கற்று' என்றும், நிலவுலகிலன்றித் தேவருலகில் வீடுபேற்று முயற்சிக் கிடமின்மையால் 'ஈண்டு' என்றுங் கூறினார். 'ஈண்டு வாரா நெறி வீட்டுநெறி. லீட்டையளிப்பது இறைவனேயாதலால் அவனை யறிவதற்கு ஆம்புடைகள் (உபாயங்கள்) கல்வி, கேள்வி, தெளிவு, உன்னம் யாவனை) என நான்காம். கேள்வியும் கல்வியுளடங்குமாதலின் அவையிரண்டும் இங்கே ஒருங்கே கூறப்பட்டன.