பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

திருக்குறள்

தமிழ் மரபுரை



"இன்பமும் பொருளும் அறனு மென்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
காமக் கூட்டங் காணுங் காலை" (கள.1)

என்று தொல்காப்பியங் கூறுதல் காண்க.

தமிழர் புறநாகரிகத் துறைகளில் மட்டுமன்றி அகநாகரிகமான பண்பாட்டுத் துறையிலும் மறுமைக்குரிய சமயத்துறையிலும் தலைசிறந்திருந்ததினால், சமயநூலாரும் அறநூலாரும் அறத்திற்கே சிறப்புக் கொடுத்து அறம்பொரு ளின்பம் எனத் தலைமாற்றிக் கூறினர்.

“அந்நிலை மருங்கின் அறமுத லாகிய
மும்முதற் பொருட்கு முரிய வென்ப" (செய். 105)

என்று தொல்காப்பியமும்.

"அறனும் பொருளும் இன்பமு மூன்றும்
ஆற்றும் பெருமநின் செல்வம்", (28)


"சிறப்புடை மரபிற் பொருளு மின்பமும்
அறத்துவழிப் படுஉந் தோற்றம் போல" (31)

என்று புறநானூறுங் கூறுதல் காண்க. அறவழியிற் பொருளை யீட்டி அதைக் கொண்டு அறவழியில் இன்பம் நுகர வேண்டுமென்பது கருத்து. இன்பம் என்பது முதற்கண் இவ்வுலக வின்பத்தையும் பின்பு அதனொடு விண்ணுலக வின்பத்தையும் அதன்பின் அவற்றொடு வீட்டுலக வின்பத்தையுங் குறித்தது.

இது சமயத்துறைபற்றிய நாகரிக வளர்ச்சியைக் காட்டும். வீட்டின்பம் பலவகையில் ஏனை யிரண்டினும் வேறுபட்டதாதலின், பின்னர் அறம்பொருளின்பம் வீடு எனப் பிரித்துக் கூறப்பட்டது. ஆயினும் வீடென்பது அறம் என்னும் வாயில் வகையிலும் காதலின்பம் என்னும் உவமை வகையிலுமன்றி வண்ணனை வகையிற் கூறப்பட வியலாதாதலின், நாற்பொருளும் நூலளவில் என்றும் முப்பாலாகவே இருக்கும். அதனாலேயே திருக்குறட்கும் முப்பால் என்று பெயர். நாற்பொருளும், மாந்தர்க்கு நன்மைசெய்தல் பற்றி உறுதிப் பொருள் என்றும், சிறப்புடைமைபற்றி மாண்பொருள் என்றும் கூறப்படும். கல்வியின் பயன் கடவுள் திருவடியடைதல் என்னுங் கருத்தெழுந்தபின், நாற்பயனே நூற்பயன் என்றாயிற்று.