பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

3



“அறம்பொரு ளின்பம்வீ டடைதல்நூற் பயனே” (நன். 10)

என்பது நன்னூற் பாயிரம்.

அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்சொல்லையும், முறையே தர்ம, அர்த்த, காம, மோக்ஷ என மொழிபெயர்த்தனர் வடமொழியாளர். ஆயின், தமிழில் அறம் என்பது நல்வினையையும், வடமொழியில் தர்ம என்பது வருணாச்சிரம தருமம் என்னும் குலவொழுக்கத்தையுமே குறிக்கும்.

3. தமிழிலக்கியப் பல்வேறு பொருட்பாகுபாடு

தமிழிலக்கியத்தின் இயல்பை அறியாத ஆரியவழியினரும் ஆராய்ச்சியில்லாரும், பொருளிலக்கணப் பாகுபாடொன்றையே தமிழர் பொருட்பாகுபாடென்று கொண்டு, அறம்பொரு ளின்பம் வீடென்னும் அறநூற் பாகுபாட்டை ஆரியரதென்றும் தமிழர் அதைத் தழுவினரென்றும், முறையே துணிந்தும் மயங்கியும் கூறுவராயினர். பொருட்பாகுபாடு பெரும்பாலும் நூல்தொறும் வேறுபடுவதாகும்.

பொருள், குணம், கருமம், பொது, சிறப்பு, ஒற்றுமை, இன்மை எனப் பொருள் ஏழென்பது ஏரண (தருக்க) நூல்.

"பொருள்குணங் கருமம் பொதுச்சிறப் பொற்றுமை
இன்மை யுடன்பொரு ளேழென மொழிப”

என்பது அகத்தியத் தருக்க நூற்பா.

இறை (பதி), உயிர் (பசு), தளை (பாசம்) எனப் பொருள் மூன்றென்பது சிவனியக் கொண்முடிபு (சைவசித்தாந்த) நூல்.

அறம், பொருள், இன்பம், வீடு எனப் பொருள் நான்கென்பது அறநூல்.

இலக்கண நூலில் அதிகாரந்தொறும் பொருட்பாகுபாடு வேறுபடும்.

உயிர்,மெய், உயிர்மெய் (பிராணி) எனப் பொருள்களை மூன்றாகப் பகுப்பது எழுத்ததிகாரம்; பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என ஆறாகவும், உயர்திணை, அஃறிணை என இரண்டாகவும் பகுப்பது சொல்லதிகாரம்: அகம், புறம் என இரண்டாகப் பகுப்பது பொருளதிகாரம்.

“அன்பே அறனே இன்பம் நாணொடு” (பொருள்.21)

“அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்” (கற்.51)

“ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பாலினும்” (அகத். 41)