உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

திருக்குறள்

தமிழ் மரபுரை


பிராமணனாகப் பிறக்கமுடியுமென்றும், இறைவன் என்றும் பிராமண வடிவிலேயே காட்சிளிப்பனென்றும், ஆரியக் கருத்துகள் தமிழருள்ளத்திற் பதிக்கப்பட்டன. தமிழத் தெய்வங்களை ஆரியத் தெய்வங்களாக மாற்றுதற்கும் தமிழரை அடிமடைய ராக்குதற்கும் பல புராணங்கள் இயற்றப்பட்டன. தமிழர் கொண்முடிபு (சித்தாந்த) நூல்களிலும் ஆரியக் கருத்துக்களும் சொற்களும் சேர்க்கப்பட்டன.

இங்ஙனம் ஆரியத்தால் ஏற்பட்ட அவலங்கள் போதாவென்று, புத்தம் சமணம் முதலிய துன்பமதங்களும் உலகாயதம் பூதம் முதலிய சிற்றின்ப மதங்களும், தமிழகத்தை அளவிறந்து அலைக்கழித்தன.

7. திருவள்ளுவர் திருக்குறளியற்றிய நோக்கம்

ஆரியத்தாலும் நம்பா (நாத்திக) மதங்களாலும், சிறப்பாக ஆரியத்தால், குமுகாயத்துறையிலும் சமயத்துறையிலும் தமிழகத்திற்கு ஏற்பட்ட எல்லாக் கேடுகளும் பாடுகளும் துன்பங்களும் தொல்லைகளும் நீங்கி எல்லாரும் இன்பமாக வாழவேண்டு மென்னும் இன்னருள் நோக்கங் கொண்டே, தெள்ளிய மனமும் ஒள்ளிய அறிவும் திண்ணிய நெஞ்சும் நுண்ணிய மதியும் கொண்ட திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார் என்க.


“அந்தண ரென்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ்
செந்தண்மை பூண்டொழுக லான்”, (30)

"அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற்
போஒய்ப் பெறுவ தெவன்”, (46)

"ஒழுக்க முடைமை குடிமை யிழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்”, (133)

“மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்”, (134)

"அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று”, (259)

"ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூன்மறப்பர்
காவலன் காவா னெனின்", (560)

"பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்”, (972)