பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

திருக்குறள்

தமிழ் மரபுரை



மேற்காட்டியபாப் பகுதிகளில் நான்மறையென்றும் வேதமென்றும் குறித்திருக்கின்றதே யொழியத் திரிவர்க்கமென்று குறிக்கப்படவில்லை. இதற்கு முற்றும் மாறாக.

"தானே முழுதுணர்ந்து தண்டமிழின் வெண்குறளால்
ஆனா வறமுதலா வந்நான்கும் – ஏனோருக்
கூழி னுரைத்தாற்கு மொண்ணீர் முகிலுக்கும்
வாழியுல கென்னாற்று மற்று"

எனவுள்ளது நக்கீரர் பெயரிலுள்ள பாட்டு.

நான்முகன் தேவியாகச் சொல்லப்படும் நாமகள் பெயரிலுள்ள பாட்டு.

"நாடா முதனான் மறைநான் முகனாவிற்
பாடா விடைப்பா ரதம்பகர்ந்தேன் – கூடாரை
யெள்ளிய வென்றி யிலங்கிலைவேன் மாறபின்
வள்ளுவன் வாயதென் வாக்கு"

என்பது. இதிலும் திரிவர்க்கக் குறிப்பில்லை.

மேலும், திருவள்ளுவர் முப்பாலால் நாற்பொருளுங் கூறினாரேயன்றி, முதல் முப்பொருளை மட்டும் கூறினாரல்லர். மக்களால் இயற்றப்பட்ட முப்பானூல் வடமொழியில் இல்லாததினாலேயே, 'திரிவர்க்கம்' என்பது நான்முகனால் இயற்றப்பெற்ற தென்றும், "ஓடிப்போன முயல் பெரிய முயல்' என்பதற்கொப்ப அது 'மகாசாஸ்திரம்' என்றும் கூறுவாராயினர் என்க.

இனி, கி.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த சாணக்கியரும் அவர் மாணவராகிய காமந்தகரும் எழுதிய பொருள்நூற் கருத்துகள் திருக்குறளிற்பயின்று வருவதால், அதன் பொருட்பாலுக்கு வடமொழி 'அருத்த சாத்திரம்' முதனூலென்பர் தமிழ்ப் பகைவரும் போலித் தமிழரும்.

"தொன்றுதொட்டு வருதல் சேர சோழ பாண்டிய ரென்றாற் போலப் படைப்புக்காலந் தொடங்கி மேம்பட்டு வருதல்" என்று பரிமேலழகராலும் பழைமை கூறப்படும் மூவேந்தர் குடிகளும், அவற்றுள்ளும் சிறப்பாக,

"பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையு மிமயமுங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன்”
(சிலப். 11:19-22)