பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

திருக்குறள்

தமிழ் மரபுரை



"அகர முதல" என்று தமிழ் நெடுங்கணக்கின் முதலெழுத்தில் தொடங்கி, "முயங்கப் பெறின்" என்று அதன் இறுதியெழுத்தில் முடிந்திருப்பதும், திருக்குறளின் முழுநிறைவைக் காட்டும்.

“ஆயிரத்து முந்நூற்று முப்ப தருங்குறளும்
பாயிரத்தி னோடு பகர்ந்ததற்பின் - போயொருத்தர்
வாய்க்கேட்க நூலுளவோ மன்னு தமிழ்ப்புலவ
ராய்க்கேட்க வீற்றிருக்க லாம்.”
(திருவள்ளுவமாலை)

உலகப் பொதுமை

திருக்குறள் தமிழ்நாட்டிற்கு மட்டுமன்றி உலக முழுமைக்கும் ஒத்ததென்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்ததே. இதுபற்றியே "வள்ளுவன் தன்னை உலகினுக் கேதந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" என்று பாடினார் பாவலர் சுப்பிரமணிய பாரதியாரும்.

வாழ்க்கைத்துறையிலும் ஆட்சித்துறையிலும் மட்டுமன்றிச் சமயத் துறையிலும் பொதுவாயிருப்பதால் பொதுமறை யெனப்பட்டது.

“ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறெனின்
அன்றென்ப ஆறு சமயத்தார் - நன்றென
எப்பா வலரும் இயைபவே வள்ளுவனார்
முப்பால் மொழிந்த மொழி.”
(திருவள்ளுவமாலை)

காலவரம்பின்மை

திருக்குறள் இத்துணைக் காலந்தான் அல்லது இன்ன நூற்றாண்டு வரைதான் பயன்படுமென்று எவருஞ் சொல்லுதற்கிடமின்றி, எக்காலத் திற்கும் ஏற்றதாயிருப்பதும் அதன் ஏற்றங்களுள் ஒன்றாம்.

கோவரசும் (Monarchy), குடியரசும் (Democracy), மக்களாட்சியும் (Republic), கூட்டுடைமையும் (Socialism) நீங்கி உலகெங்கும் பொதுவுடைமை (Communism) வரினும் அதற்கும்.

“பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல்
நூலோர் தொகுத்தவற்று ளெல்லாந் தலை”, (322)

"பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந்
தீப்பிணி தீண்ட லரிது", (227)

"இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக வுலகியற்றி யான்"
(1062)

என்னுங் குறள்கள் இடந்தரும் என்க.