பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

திருக்குறள்

தமிழ் மரபுரை



"மணற்கிளைக்க நீரூறு மைந்தர்கள் வாய்வைத்
துணச்சுரக்குந் தாய்முலை யொண்பால் - பிணக்கிலா
வாய்மொழி வள்ளுவர் முப்பான் மதிப்புலவோர்க்
காய்தொறு மூறு மறிவு."
(திருவள்ளுவமாலை)

நடுவு நிலைமை

எல்லாரும் வாழவேண்டுமென்பதும், குற்றத்திற்கேற்ப எல்லாரையும் ஒப்பத் தண்டிக்க வேண்டு மென்பதும், திருக்குறளின் நடுநிலைக் கொள்கைகளாம். இவை ஆரியக் கொள்கைகட்கு நேர்மாறானவை.

"வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மனுவாதி யொருகுலத்திற் கொருநீதி"

என்று மனோன்மணீய ஆசிரியர் கூறுதல் காண்க.

உயர்நிலையறம்

எல்லா அறநூல்களுள்ளும் உயர்ந்த ஒழுக்க வரம்புகளைக் கூறுவது திருக்குறளே.

எ-டு:

"பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யெனல்."
(196)

"இன்னாசெய் தாரை யொறுத்த லவர்நாண
நன்னயஞ் செய்து விடல்."
(314)

“உள்ளத்தா லுள்ளலுந் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தாற் கள்வே மெனல்.
(282)

"ஈன்றாள் பசிகாண்பா னாயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை."
(656)

"இறந்த மூப்பினராய இருமுது குரவரும் கற்புடை மனைவியுங் குழவியும் பசியான் வருந்து மெல்லைக்கண், தீயன பலவுஞ் செய்தாயினும் புறந்தருக" என்பது ஆரிய அறநூல் நெறியீடு.

நடைமுறையறிவு

திருவள்ளுவர் மக்கட்கு உயர்ந்த ஒழுக்கத்தைக் வகுத்தாரேனும். உலகியலறிந்து அதன் ஒழுங்கான நடப்பிற்குத் தோதாகவே சில விலக்கு களையும் அமைத்திருக்கின்றார்.