பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

27



அருளுடைமை, புலான்மறுத்தல், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னாசெய்யாமை, கொல்லாமை என்னும் அறவினைகளை அரசியலில் முற்றக் கடைப்பிடிப்பது அரிதாதலின், அவற்றை இல்லறவியலிற் கூறாது துறவறவியலிலேயே கூறியுள்ளார்.

"தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்" என்று சொன்ன வள்ளுவரே, "புலத்தலிற் புத்தேணா டுண்டோ" என்றும், "ஊடுதல் காமத் திற்கின்பம்" என்றும் உடன்பட்டுள்ளார்.

உண்மைக்கூற்று

இறைவனே நால்வகை வருணத்தாரையும், முறையே தன் முகத்தினின்றும் மார்பினின்றும் தொடையினின்றும் பாதத்தினின்றும் படைத்தானென்றும், அவருட் பிராமணனே உயர்ந்தவனென்றும், மற்ற மூவரும் அவனுக்குத் தாழ்ந்தவரென்றும், அவனுக்குத் தொண்டு செய்யவே படைக்கப்பட்டவரென்றும். ஆரிய நூல்கள் துணிந்து பொய்யுரைப்பது போல, திருக்குறள் ஓரிடத்தும் கட்புலனான உண்மைகளைத் திரித்துக் கூறுவதில்லை. எங்கேனும் ஓரிடத்தில் உயர்வுநவிற்சி அளவிறந்திருப்பினும், அது அணி தழுவியதும் உண்மை எல்லாராலும் அறியப்படத்தக்கதுமாகவேயிருக்கும்.

எ-டு:

"அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்."
(குறள்.1120)

"பொய்ப்பால பொய்யேயாய்ப் போயினபொய் யல்லாத
மெய்ப்பால மெய்யாய் விளங்கினவே"
(திருவள்ளுவமாலை)

அதிகாரவொழுங்கு

நூன் முழுதும் 133 அதிகாரங்களாக வகுக்கப்பட்டிருப்பதும் ஒவ்வொன்றும் பப்பத்துக் குறள் கொண்டிருப்பதும், ஒவ்வோரியலிலும் அதிகாரங்கள் ஒன்றோடொன்று கோவையாகத் தொடர்புகொண்டிருப்பதும், பிற நூல்களிற் காணற்கரிய ஒழுங்காகும்.

சொற்பொருள் தூய்மை

அக்காலத்தில் மொழியாராய்ச்சி யின்மையாலும், வடசொற்கள் ஒவ்வொன்றாகப் புகுத்தப்பட்டமையாலும், தமிழருட் பெரும்புலவர்க்கும் தென்சொல் வடசொல் வேறுபாடு தெரியாதிருந்தது. அதனால் திருக்குற-

4