பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

திருக்குறள்

தமிழ் மரபுரை


அதி. 4 - அறன்வலியுறுத்தல்

அதாவது, முனிவரால் கூறப்படும் மூன்றனுள் முதன்மையானதும், மக்கள் இருவகையின்பமும் அடைதற்கும் உலகம் இனிது நடைபெறற்கும் எல்லாராலும் கடைப்பிடிக்கப்பட வேண்டியதுமான, அறத்தின் இன்றியமையாமையை வலியுறுத்திக் கூறுதல்

31.

சிறப்பீனும் செல்வமு மீனு மறத்தினூஉங்
காக்க மெவனோ வுயிர்க்கு.

(இ-ரை.) சிறப்பு ஈனும் - மறுமையில் விண்ணுலக வின்பத்தையும் வீடுபேற்றையுந் தரும்; செல்வமும் ஈனும் - இம்மையிற் செல்வத்தையுந் தரும்; உயிர்க்கு அறத்தின் ஊங்கு ஆக்கம் எவனோ - ஆதலால் மக்களுயிர்க்கு அறத்தைவிடச் சிறந்த ஆக்கம் எதுதான்?

எல்லாப் பேற்றுள்ளும் சிறந்த பேரின்ப வீடும் சிற்றின்பத்துட் சிறந்த விண்ணின்பமும் சிறப்பெனப் பெற்றன. செல்வமும் விண்ணின்பமும் இல்லறத்தார்க்கும், வீடு துறவறத்தார்க்கும் உரியனவாம். ஆகுவது ஆக்கம். ஆகுதல் மேன்மேலுயர்தல். இனி, "சிறப்பீனும் செல்வமு மீனும்" என்பதற்கு. ஏதேனுமொரு துறையில் தலைமை பெறுதற்கேற்ற சிறப்பாற்றலையுந் தரும்; எண்வகைச் செல்வமுந் தரும் என்று உரை கூறினுமாம். 'அறத்தினூஉங்கு' இன்னிசை யளபெடை ஆக்கம் என்றது அகற்கேதுவை. 'ஓ' அசைநிலை.

32.

அறத்தினூஉங் காக்கமு மில்லை
யதனை மறத்தலி னூங்கில்லை கேடு.

(இ-ரை.) அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை - ஒருவர்க்கு அறஞ்செய்வதிலும் சிறந்த ஆக்கவழியுமில்லை; அதனை மறத்தலின் ஊங்கு கேடு இல்லை - அதை மறந்து செய்யாது விடுவதினும் பெரிய கெடுதல்வழியு மில்லை.

'அறத்தினூஉங்கு' இன்னிசை யளபெடை. செய்யாமையாகிய எதிர்மறையொடு வேற்றுமைப்படுத்திக் காட்டற்கு, மேற்கூறிய உடன்பாட்டுச் சொல்லியத்தை (வாக்கியத்தை) வழிமொழிந்தார்.

33.

ஒல்லும் வகையா னறவினை யோவாதே
செல்லும்வா யெல்லாஞ் செயல்.

(இ-ரை.) அறவினை - அறமாகிய நல்வினையை: ஒல்லும் வகையான் -தத்தமக் கியன்றவாறு; செல்லும் வாய் எல்லாம் ஓவாதே செயல் - அது நடைபெறக் கூடிய வழியெல்லாம் இடைவிடாது செய்க.