62
திருக்குறள்
தமிழ் மரபுரை
பழுமரக்காவும் போல்வன பலபுல வின்பந் தருவன; கட்டழகியான கற்புடை மனைவியெனின் ஐம்புலவின்பமும் ஒருங்கே தரவல்லாள். இனி, இன்பப் பொருள் போன்றே அதனைக் கொள்ளும் செல்வப் பேறும் உள்ளத்திற்கு இன்பந் தருவதாம். காசு தானாக இன்பந்தராவிடினும் இன்பப் பொருள்களைக் கொள்ளுங் கருவியாதல் காண்க. விலையாகக் கூடிய எல்லாப் பொருளும் காசுபோற் பயன்படுவனவே.
ஒருவன் அறவழியில் தேடிய தன் பொருளை நுகர்வதே புகழொடு கூடிய இன்பமாம்; பிறன்பொருளை நுகர்வது பழியொடு கூடிய துன்பமாம். பிரிநிலை யேகாரம் பின்னுங் கூட்டப்பட்டது.
40.
செயற்பால தோரு மறனே யொருவற்
குயற்பால தோரும் பழி.
(இ-ரை.) ஒருவர்க்குச் செயற்பாலது அறனே - ஒருவன் என்றுஞ் செய்யத்தக்கது நல்வினையே; உயற்பாலது பழியே - செய்யாது விடத்தக்கது தீவினையே.
'ஓரும்' ஈரிடத்தும் அசைநிலை. ஆயினும், முதற்காலத்தில் 'ஆராய்ந் தறியும்' என்று பொருள்படும் ஏவற்பன்மை அல்லது பெயரெச்சமாகவே அது வழங்கியிருத்தல் வேண்டும். பிரிநிலையேகாரம் பின்னுங் கூட்டப்பட்டது.
பாயிரவியல் முற்றிற்று.