பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 
2

இல்லறவியல்

அறநூற் பாகுபாட்டின்படி அறம்பொரு ளின்பம் வீடென வரிசைப் படுத்தப்பட்ட உறுதிப்பொருள் நான்கனுள், முதலதான அறத்தைக் கடைப் பிடிக்கும் இருவகை வாழ்க்கை முறைகளையுங் கூறும் பெரும் பகுதி, அறத்துப்பால் எனப்பட்டது. இது பாயிரத்தின் இறுதி அதிகாரமான அறன் வலியுறுத்தலொடு பொருள்தொடர்புங் கொண்டதாயிற்று. பகு - பகல் - பால் = பகுதி, நூற் பெரும்பகுதி,

இருவகை அறவாழ்க்கைகளுள், இயல்பானதும் பெரும்பான்மை யானதும் உலக நடப்பிற்கு இன்றியமையாததும், துறவறத்திற்கும் இன்றி யமையாத துணையாவதும், உலகிலுள்ள ஐம்புல வின்பமும் நுகர்வதும், முறைப்படி கடைப்பிடிக்கப்பெறின் வீடுபேற்றையுந் தருவதும், நல்லற மென்று உயர்ந்தோராற் சிறப்பிக்கப் பெறுவதுமான இல்லற வாழ்க்கையின் இயல்பைக் கூறும் சிறு பகுதி இல்லறவியல் எனப்பட்டது.


அதி. 5 - இல்வாழ்க்கை

அதாவது, ஒருவன் தன் கற்புடை மனைவியொடு கூடி இல்லத் தின்கண் இருந்து இன்பந்துய்த்து வாழும் அறவாழ்க்கையின் இன்றியமை யாமையையும் சிறப்பையும் எடுத்துக் கூறுவது.

41.

இல்வாழ்வா னென்பா னியல்புடைய மூவர்க்கு
நல்லாற்றி னின்ற துணை.

(இ-ரை.) இல்வாழ்வான் என்பான் - இல்லறத்தில் வாழ்பவன் என்று சிறப்பித்துச் சொல்லப்படும் வேளாளன்; இயல்புடைய மூவர்க்கும் இல்லறத்தில் வாழும் இயல்புடைய ஏனை மூவர்க்கும்; நல்லாற்றின் நின்ற துணை - அவர் செல்லும் நல்லற நெறிக்கண் நிலைபெற்ற துணையாம்.