பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

திருக்குறள்

தமிழ் மரபுரை



ஏனை மூவராவார் இருவகை யந்தணருள் இல்லறத்தானான பார்ப் பானும் அரசனும் வணிகனுமாவர். 'இயல்புடைய' என்னும் அடைமொழி அதிகார இயைபினால் இல்லறத்தாரைக் குறிக்குமேயன்றித் துறவறத்தாரைக் குறிக்காது. அந்தணர் (பார்ப்பார்) முதலிய நால்வரும் இல்லறத்தாரா யிருப்பரேனும், அவருள் தலைசிறந்தவர் வேளாளரே யென்பது கருத்து.


உழுவா ருலகத்தார்க் காணியஃ தாற்றா
தெழுவாரை யெல்லாம் பொறுத்து”, (1033)

“ஏரி னுழாஅ ருழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால்", (14)

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாந்
தொழுதுண்டு பின்செல் பவர்", (1033)

"தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்க றானென்றாங்
கைம்புலத்தா றோம்ப றலை", (43)

"இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு", (81)

"வித்து மிடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்" (85)

என்று திருவள்ளுவரும்,

"வேளாள னென்பான் விருந்திருக்க வுண்ணாதான்" (திரிகடு.12)

என்று நல்லாதனாரும், கூறியிருத்தலையும், 'இல்வாழ்வான்' என்பதனோ டொத்த 'குடியானவன்' என்னுஞ் சொல் உலக வழக்கில் உழவனையே குறித்து வருதலையும் நோக்குக.

ஆரியர் வருமுன் ஐயரென்றும் பார்ப்பாரென்றும் சொல்லப்பட்ட இருவகையந்தணரும் தமிழரே. அவருள் முன்னவர் துறவியர்; பின்னவர் ஆசிரியர் புலவர் பண்டாரம் உவச்சர் குருக்கள் திருக்கள் நம்பியர் போற் றியர் எனப் பல்வேறு பெயர்பெற்ற இல்லறத்தார். ஏனை மூவகுப்பார் போன்றே அந்தணரும் இருவகுப்பார் என அறிக.