பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - இல்லறவியல் - இல்வாழ்க்கை

65



திருவள்ளுவர் பிராமணீயம் என்னும் ஆரியத்தை ஒழிக்கவே நூல் செய்தாராதலின், பிரமசரியம் வானப்பிரத்தம் சந்நியாசம் என்னும் முந்நிலை பட்ட பிராமணரைக் காத்தலைத் தமிழ வேளாளன் கடமையெனக் கூறியிரார் என்பது தெளிவுறு தேற்றமாம்.

"அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை" என்று ஆசிரியர் கூறுவதால், 'நல்லாறு' என்றது இல்லறத்தையே என்பது துணியப்படும். 'என்பான்' என் னும் செய்வினை வாய்பாட்டுச் சொல் செயப்பாட்டு வினைப் பொருளது.

42.

துறந்தார்க்குந் துவ்வா தவர்க்கு மிறந்தார்க்கு
மில்வாழ்வா னென்பான் றுணை.

(இ-ரை.) துறந்தார்க்கும் - உலகப்பற்றைத் துறந்தவர்க்கும்; துவ்வாத வர்க்கும் - உண்பதற்கில்லாத வறியர்க்கும்; இறந்தார்க்கும் - ஒருவரு மின்றித் தன்னிடம் வந்து இறந்தார்க்கும்; இல்வாழ்வான் என்பான் துணை இல்லறத்தான் என்று சிறப்பித்துச் சொல்லப்படுபவன் துணையாம்.

“உழவினார் கைம்மடங்கி னில்லை விழைவதூஉம்
விட்டேமென் பார்க்கு நிலை,” (1036)

இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர் (1035)

என்று ஆசிரியர் வேறிடத்துங் கூறுதல் காண்க.

"துறந்தார் பெருமை" (22), "துறந்தாரின் தூய்மை" (159), "துறந்தார்க்குத் துப்புரவு” (263), “துறந்தார் படிவத்தர்" (586) என வருமிடமெல்லாம், துறந்தார் என்னுஞ் சொல் செய்வினைப் பொருளே தருதலால், "களைகணானவராற் றுறக்கப்பட்டார்க்கும்" என்று பரிமேலழகர் ஈண்டுச் செயப்பாட்டு வினைப் பொருள் கூறுவது பொருந்தாது. முந்தின குறளுரையில் அவர் மூவகைப் போலித் துறவியரைப் பொருத்தியதினாலேயே இங்கு இவ்வா றுரைக்க நேர்ந்தது. களைகணானவரால் துறக்கப்பட்டவரும் துவ்வாதவருள் அடங்குவர். இறந்தார்க்குச் செய்யுந் துணை ஈமக்கடனும் இறுதிச் சடங்கும் தென்புலத்தார் படையலுமாம்.

43.

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்க றானென்றாங்
கைம்புலத்தா றோம்ப றலை.