பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - இல்லறவியல் - இல்வாழ்க்கை

67



“இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்
உழவிடை விளைப்போர் பழவிற லூர்களும் " (சிலப்.10:149-50)

என்று இளங்கோவடிகளும், கூறுதல் காண்க.

44.

பழியஞ்சிப் பாத்தூ ணுடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்ச லெஞ்ஞான்று மில்.

(இ-ரை.) வாழ்க்கை - ஒருவனது இல்லறவாழ்க்கை; பழி அஞ்சிப் பாத்துஊண் உடைத்தாயின் - ஈயாத கஞ்சன் என்று பிறர் பழித்தற்கு அஞ்சித் துறந்தார் முதலிய மூவர்க்கும் தென்புலத்தார் முதலிய ஐவர்க்கும் அவன் பொருளைப் பகுத்தளித்து உண்டலை இயல்பாகக் கொண்டிருப்பின்; வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல் - அவனது மரபுவழி ஒருபோதும் அறாது எக்காலும் தொடர்ந்து வருவதாம்.

இறைவனருளும் உலகோர் வாழ்த்தும் அவன் வழியை நீடிக்கச் செய்யும் என்பது கருத்து.

45.

அன்பு மறனு முடைத்தாயி னில்வாழ்க்கை
பண்பும் பயனு மது.

(இ-ரை.) இல்வாழ்க்கை அன்பும் அறனும் உடைத்தாயின் - ஒருவனது இல்லறவாழ்க்கை அவனுக்கும் அவன் வாழ்க்கைத் துணைக்கும் இடைப்பட்ட இருதலைக் காதலையும் அவர் கருத்தொருமித்துப் பிறர்க்குச் செய்யும் அறவினைகளையும் உடைத்தாயின்; அது பண்பும் பயனும் - அவ் வுடைமை அவ் வாழ்க்கைக்கு முறையே பண்பு தன்மையும், பயன் விளைவு மாகும்.

இல்லற வாழ்க்கை இருபகட் டொருசகட் டொழுக்கம் போல்வதாகலின், கணவன் மனைவியரிடைப்பட்ட இருதலையன்பு அதன் பண்பாயிற்று. அதனாற் செய்யப்படும் அறம் அதன் பயனாயிற்று. அன்பு பண்பும் அறன் பயனும் ஆகும் என்பது நிரனிறை.

46.

அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றிற்புறத்தாற்றிற்
போஒய்ப் பெறுவ தெவன்.

(இ-ரை.) இல்வாழ்க்கை அறத்தாற்றின் ஆற்றின் - ஒருவன் இல்லற வாழ்க்கையை அதற்குரிய அறநெறிப்படி நடத்துவானாயின்; புறத்தாற்றில்