பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

திருக்குறள்

தமிழ் மரபுரை


போய்ப் பெறுவது எவன் - அதற்குப் புறம்பாகிய துறவுநெறியிற் போய்ப் பல்வகையில் துன்புறுவதல்லது சிறப்பாகப் பெறும் பயன் யாது?

அறத்தாறு என்றது அன்புடைமை, விருந்தோம்பல், இனியவை கூறல், செய்ந்நன்றியறிதல், நடுநிலைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பிறனில் விழையாமை, பொறையுடைமை, அழுக்காறாமை, வெஃகாமை, புறங்கூறாமை, பயனிலசொல்லாமை, தீவினையச்சம், ஒப்புரவறிதல், ஈகை என்னும் பதினாறறத் தொகுதியை. இல்லறத்தாலும் வீடுபேறுண்டாமென்பது தமிழர் கொள்கையாதலின், துறவறத்தினால் மட்டும் வீடுபெற முடியும் என்னும் ஆரியக் கொள்கையை மறுத்து, இல்லறத்தில் தானும் இன்புற்றுப் பிறர்க்கும் ஒல்லும் வகையால் அறவினை ஓவாதே செல்லும்வா யெல்லாம் செய்து இறுதியில் பேரின்பமும் பெறுவதாயிருக்க; துறவறத்திற் போய்ப் பசி பட்டினியாலும் தட்பவெப்ப மிகையாலும் துன்புற்றும் ஒருவர்க்கும் ஒருவகையிலும் உதவாதும், கூடாவொழுக்கத்திற் காளாகியும். ஒருகால் இறுதி யிற் பிறவா வீடுபெறினும் சிறப்பாகப் பெறுவது எதுதானென்று வினவுகின்றார் ஆசிரியர். சிவனடியார் பலர் இல்லறத்தில் நின்றே வீடு பெற்றாரென்று பெரிய புராணங் கூறுதல் காண்க. போஒய் என்பது இசைநிறை யளபெடை

47.

இயல்பினா னில்வாழ்க்கை வாழ்பவனென்பான்
முயல்வாரு ளெல்லாந் தலை.

(இ-ரை.) இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முறைப்படி இல்லறவாழ்க்கை வாழ்பவன் என்று சொல்லப்படுகின்றவன்; முயல்வாருள் எல்லாம் தலை - பற்றறுக்க முயலும் துறவுநெறியார் எல்லா ருள்ளும் தலைமையானவனாம்.

முற்றத் துறந்தார் யாரென மக்களால் அறியப்படாமையின், 'முயல் வாருளெல்லாம்' என்றும், இருவகை யறத்தார்க்கும் உதவியே வீடு பெறு தலின் 'தலை' என்றுங் கூறினார். என்பான் என்னும் செய்வினை வாய்பாட்டுச் சொல் செயப்பாட்டு வினைப் பொருளது.

48.

ஆற்றி னொழுக்கி யறனிழுக்கா வில்வாழ்க்கை
நோற்பாரி னோன்மை யுடைத்து.

(இ-ரை.) ஆற்றின் ஒழுக்கி - தவஞ்செய்வாரைத் தவநெறியில் ஒழுகச் செய்து; அறன் இழுக்கா இல்வாழ்க்கை - தானும் தன் அறத்தினின்று தவறாத இல்லறவாழ்க்கை; நோற்பாரின் நோன்மை உடைத்து - அத் தவஞ் செய்வார் நிலையினும் மிகுந்த பொறைத்திறனை யுடையது.