பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - இல்லறவியல் - வாழ்க்கைத் துணைநலம்

73



57.

சிறைகாக்குங் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்குங் காப்பே தலை.

(இ-ரை.) மகளிர் சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும் - பெண்டிரைக் கணவர் சிறைச்சாலையுள் அடைத்துவைத்தாற்போற் காக்குங் காவல் என்ன பயன்படும்? நிறை காக்கும் காப்பே தலை - அப் பெண்டிரே தங்கள் கற்பினால் தங்களைக் காத்துக்கொள்ளுதலே தலையாய காவலாம்.

சிறை காப்பாவது இரவும் பகலும் வீட்டைவிட்டு வெளியேறாமற் காவல் செய்தல். நிறை யென்பது மனத்தைக் கற்புநெறியில் நிறுத்துதல். கற்பில்லாத பெண்ணைக் காவல் செய்தல் அரிது என்பது கருத்து. ஏகாரம் பிரிநிலை.

58.

பெற்றாற் பெறிற்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழு முலகு.

(இ-ரை.) பெண்டிர் பெற்றான் பெறின் - பெண்டிர் தம் கணவனுக்குத் தொண்டு செய்தலைப் பெறுவாராயின்; புத்தேளிர் வாழும் உலகு பெருஞ் சிறப்புப் பெறுவர் - தேவர் வாழும் உலகின்கண் அவராற் பெருஞ்சிறப்புச் செய்யப் பெறுவர்.

தொண்டுசெய்தல் என்பது சொல்லெச்சம். கொண்டானைப் பேணும் பெண்டிர் மண்ணுலகத்தில் மட்டுமன்றி விண்ணுலகத்திலும் சிறப்படைவர் என்பது இதனாற் கூறப்பட்டது.

59.

புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை யிகழ்வார்முன்
னேறுபோற் பீடு நடை.

(இ-ரை.) புகழ் புரிந்த இல் இல்லோர்க்கு - தனக்கும் தன் கணவனுக் கும் புகழை விரும்பிய மனைவி யில்லாதார்க்கு: இகழ்வார் முன் ஏறுபோல் பீடுநடை இல்லை - தம்மைப் பழித்துரைக்கும் பகைவர் முன் ஆணரிமா போல் இறுமாந்து நடக்கும் பெருமித நடையில்லை.

புரிந்த என்னும் பெயரெச்சத்தின் அகரம் தொக்கது. ஏறு என்னும் விலங்கின ஆண்பாற் பொதுப்பெயர் நடைச் சிறப்புப்பற்றி இங்கு அரிமாவின் (சிங்கத்தின்) ஆண்பாலைக் குறித்தது. கற்புடை மனைவியாற் கணவன் மதிக்கப்படுதலை,