பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

திருக்குறள்

தமிழ் மரபுரை



"செயிர்தீர் கற்பிற் சேயிழை கணவ" (புறம்.36)

"அறம்பா டிற்றே ஆயிழை கணவ" (புறம்.34:7)

"சேணாறு நல்லிசைச் சேயிழை கணவ" (பதின்.88:36)

என்னும் விளிகள் உணர்த்துதல் காண்க.

60.

மங்கல மென்ப மனைமாட்சி மற்றத
னன்கல நன்மக்கட் பேறு.

(இ-ரை.) மனைமாட்சி மங்கலம் - மனைவியின் நற்குண நற்செய்கைச் சிறப்பே இல்லறத்திற்கு மங்கலமாவது; நன்மக்கட்பேறு அதன் நன்கலம் நல்ல அறிவுடை மக்கட்பேறு அதற்கு அணிகலமாவது; என்ப - என்று கூறுவர் அறிந்தோர்.

மங்கலமென்பது நெடுநன்மை. அறிந்தோர் என்னும் எழுவாய் எஞ்சி நின்றது. 'மற்று' அசைநிலை; பெயர்மாற்று எனினும் ஒக்கும். இல்லறத்திற்கு அணிகலங் கூறுமுகத்தான் அடுத்த அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.

அதி. 7-மக்கட்பேறு

அதாவது, இனப்பெருக்கத்திற்கும் உலக நடப்புத் தொடர்ச்சிக்கும் வகுத்த இயற்கையான ஏற்பாட்டின்படியும், தத்தம் தொழிலில் தமக்கு உதவி செய்தற்பொருட்டும், உழைக்க இயலாத முதுமைக்காலத்தில் தம்மைப் பேணும் பொருட்டும், தாம் இறந்தபின் தம் பெயரால் அறஞ்செய்தற் பொருட்டும், தம் பெயரை இவ்வுலகில் நிலவச்செய்தற் பொருட்டும் பிள்ளைகளைப் பெறுதல்.

61.

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற.

(இ-ரை.) பெறும் அவற்றுள் - இல்லறத்தான் பெறக்கூடிய பேறுகளுள், அறிவு அறிந்த மக்கட்பேறு அல்ல - அறியத்தக்க நூல்களை அறியக்கூடிய பிள்ளைப்பேறு அல்லாத; பிற - வேறு சிறந்தவற்றை: யாம் அறிவதில்லை - யாம் அறிந்ததில்லை.