பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

திருக்குறள்

தமிழ் மரபுரை


யோராக மாறும் நிலைமையிருத்தலால், அம் மாறுநிலைத் தொடர்ச்சியைக் காட்டற்கே "அவர் பொருள் தந்தம் வினையான் வரும்" என்றார். அது கரணிய (காரண)க் கிளவியமாயின், "தம் வினையான் வரலான்" என்றே அமைத்திருப்பார்.

64.

அமிழ்தினு மாற்ற வினிதேதம் மக்கள்
சிறுகதை யளாவிய கூழ்.

(இ-ரை.) தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் - தம் மக்களின் சிறுகை களால் துழவிக் குழைக்கப்பட்ட சோறு; அமிழ்தினும் ஆற்ற இனிதே பெற்றோர்க்கு அவர்களின் மீதுள்ள காதல் மிகுதியால் தேவ ருணவினும் மிக இனிமையுடையதாம்.

தம் என்னும் சொல், பெற்றோரின் உடற்கூறாயிருந்து அவருடம்பினின் றும் வெளிப்பட்ட மக்களின் நெருங்கிய தொடர்பை உணர்த்தும். தேவருண வென்றது மக்களின் குருட்டுநம்பிக்கையான உலக வழக்கைத் தழுவியது.

“படைப்புப் பல படைத்துப் பலரோ டுண்ணும்
உடைப்பெருஞ் செல்வ ராயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும்
நெய்யுடை யடிசில் மெய்பட விதிர்த்து
மயக்குறு மக்களை யில்லோர்க்குப்
பயக்குறை யில்லைத்தாம் வாழு நாளே.” (புறம்.188)

"பொன்னுடைய ரேனும் புகழுடைய ரேனுமற்
றென்னுடைய ரேனு முடையரோ - இன்னடிசில்
புக்களையுந் தாமரைக்கைப் பூநாறுஞ் செய்யவாய்
மக்களையிங் கில்லா தவர்" (நள.கலிதொடர்)

என்னும் பாக்கள் இங்குக் கவனிக்கத் தக்கன.

அவிழ் - அவிழ்து - அமிழ்து - அமுது = சோறு. மருமம் மம்மம் அம்மம் - அம்முது - அமுது = பால். பாலைக் குறிக்கும் அமுது என்னும் சொல்லும் சோற்றைக் குறிக்கும் அமுது என்னும் சொல்லொடு மயங்கி, அமிழ்து என்னும் வடிவங் கொள்ளும். அமுது - அமுதம் - அம்ருத (வ). வடமொழியாளர் அம்ருத என்னும் வடசொல் வடிவை அ + ம்ருத என்று தவறாகப் பகுத்து, சாவைத் தவிர்ப்பது என்று பொருள் புணர்த்து, தேவரும் (சுரரும்). அசுரரும் திருப்பாற்கடலைக் கடைந்தெடுத்த சுரையைத் தேவர் உண்டதனால் சுரர்