பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமைத்திறன் 111

இயல் - 6

உவமைத்திறன்

கவிதைக்கு அழகு செய்வன அதில் அமையும் அணிகள். ஒரு கருத்தை மொட்டையாகச் சொல்வதை விட அழகாகச் சொல்வது கேட்போருக்கு இன்பம் பயக்கும். யாக்கை நிலையற்றது” என்ற உண்மை எல்லார்க்கும் பொது; இதனைக் கற்றவர், கல்லாதவர், பேதையர், மேதையர் ஆகிய அனைவரும் அறிவர்; மன்பதைக்கே பொதுவான உண்மை இது. இதனை நீர்மேல் குமிழி’ போன்றது என்று பொதுமக்கள் சொல்வர் இக்காலத்திற்கேற்றவாறு உப்பிய பலூன்” போன்றது என்று சொல்லியும் மகிழலாம். இதனைக் கவிஞர்

ஒருவர் கூறும்போது

படுமழை மொக்குளிற் பல்காலும் தோன்றிக் கெடுமிதோர் யாக்கை’

என்று சொல் நயத்துடன் வடிவு கொள்ளும். இவ்வாறு ஒரு பொருளை மற்றொரு பொருளினோடு ஒப்பிட்டுக் கூறும் பாங்கில் அமைவதை “உவமையணி என்று குறித்தோர் நம் முன்னோர்.

உவமை: கண்முன் காணப்பெறும் பொருள்களை ஒப்பிட்டுப் பார்க்கும் பண்பு மனிதனிடம் இயல்பாகவே அமைந்துள்ளது. மேலோட்டமாகப் பார்க்கும்போது பொருள்கள் வெவ்வேறுபோல் தோன்றினாலும் உண்மையில் அவற்றிடையே ஏதாவது ஒரு தொடர்பு இல்லாமற் போகாது. முதலில் அத்தொடர்புபுலனாகாவிடினும், ஆழ்ந்து நோக்கினால் அது விளங்காமற் போகாது. வடிவாலும், உருவாலும், பண்பாலும், தொழிலாலும், பிறவற்றாலும் பெரும்பான்மையான பொருள்கள் தொடர்பு பட்டிருத்தலை அறியும் அளவிற்கேற்பநம்முடைய அறிவும் ஆழமும் அகலமும் உடையதாகின்றது. சில பொருள் களினிடையே இவ்வொப்புமையைப் புலன்களால் அறிதல் கூடும். சிலவற்றிடம் இஃது அறிவை மட்டிலும் துணைகொண்டு அறிதல் இயலும். இன்னும் சில சமயங்களில் ஆழ்ந்து சிந்தித்தும் ஒரோவழி

1. நாலடியார் - 27